Home அரசியல் பின்வாங்கும் டாக்டர் சுப்ரா! பிசுபிசுக்கும் தேசியத் தலைவருக்கான போட்டி!

பின்வாங்கும் டாக்டர் சுப்ரா! பிசுபிசுக்கும் தேசியத் தலைவருக்கான போட்டி!

487
0
SHARE
Ad

Subramaniamமே 30 ம.இ.கா. தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியைப் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை என்றும் அதைவிட கட்சியை பலப்படுத்துவது முக்கியம் என்றும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கையால், தேசியத் தலைவர் பதவிக்காக கட்சியில் மோதல்கள் உருவாகும் என்ற ஆரூடங்கள் தற்காலிகமாக அடங்கத் தொடங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

தேசியத் தலைவருக்கு போட்டியிடப் போகின்றேன் என்ற தகவல்களை மறுக்கின்றேன் என நேற்று டாக்டர் சுப்ரமணியம் அறிவித்திருந்தார்.

தேசியத் தலைவர் போட்டியில் டத்தோஸ்ரீ சாமிவேலுவை சம்பந்தப்படுத்துவதையும் சுப்ரா கண்டித்திருந்தார்.

சுப்ராவின் இந்த அறிக்கையால், சூடு பிடிப்பது போல் தெரிந்த தேசியத் தலைவருக்கான தேர்தல் தற்போது தற்காலிகமாக சூடு தணிந்திருப்பது போல் தெரிகின்றது.

கட்சித் தேர்தல்கள் அடுத்த வருடம்தான் நடைபெறும் என்பதால் டாக்டர் சுப்ரா அமைதி காக்கின்றார் என்றும் அவர் அவசரப்பட விரும்பவில்லை என்றும் அவருக்கு நெருக்கமான ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இப்போதே, தேர்தலுக்கு தயாராவதைப் போல் காட்டிக் கொண்டால், அதனால் ஆண்டு இறுதியில் தனக்கு ஆதரவான கிளைகள் முடக்கப்படலாம் என்பதாலும் பழனிவேலுவுக்கு ஆதரவாக புதிய கிளைகள் தோற்றுவிக்கப்படலாம் என்பதாலும், போட்டியில் குதிப்பதை இப்போதைக்கு உறுதிப்படுத்த சுப்ரா விரும்பவில்லை என்றும் அவருக்கு நெருக்கமான அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே, இந்த ஆண்டு இறுதியில் ம.இ.கா கிளைகளுக்கான பி பாரங்கள் – அதாவது ம.இ.கா கிளைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் ம.இ.கா. தலைமையகத்தின் சான்றிதழ் – வழங்கப்பட்ட பின்னர்தான் உண்மையான கணக்கெடுப்புகள் ஆரம்பமாகும், அப்போதுதான் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியில் இறங்கலாமா வேண்டாமா என்ற முடிவை டாக்டர் சுப்ரா எடுப்பார் என்று கருதப்படுகின்றது.

எதிர்வரும் ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தலில் முன்னாள் தேசியத் தலைவர் ச.சாமிவேலு என்ன முடிவெடுக்கப் போகின்றார் என்பதை வைத்துத்தான் யார் அடுத்த தலைவராக வெல்ல முடியும் என்பது தெளிவாகும்.

காரணம், கட்சியில் இன்னும் கணிசமான ஆதரவையும், ஆதிக்கத்தையும் வைத்திருக்கும் சாமிவேலு பல கிளைத் தலைவர்களுடன் தொடர்புகளைத் தொடர்ந்து பேணி வருகின்றார்.

மீண்டும், பழனிவேலுவையே ஆதரிக்க அவர் முடிவு செய்தால், அதன் பின்னர் யார் பழனிவேலுவை எதிர்த்து நின்றாலும், வெல்ல முடியாது.

அதே சமயம், டாக்டர் சுப்ராவை ஆதரிக்க அவர் முடிவு செய்தால் அதனால் தேசியத் தலைவருக்கான போட்டி கடுமையாகவும், பழனிவேலுவுக்கு சவாலாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.