பெட்டாலிங் ஜெயா, மே 31 – சபாவில் நுழைவதற்கு தனக்கு தடை விதித்த தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகத் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக நுருல் இசா அன்வார் அறிவித்துள்ளார்.
சபா மாநிலத்தின் அரசியல் அமைப்புப்படி, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கலாம் என்றாலும், அந்த தடைக்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும், முதலமைச்சருக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தை அவர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று நுருல் இசா தெரிவித்துள்ளார்.
இன்று பிகேஆர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நுருல் இசா, “மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரான என்னை சபாவுக்குள் நுழைய விடாமல் தடுத்தது முறையற்றது, ஜனநாயகத்திற்கு முரணானது, ஓர் அதிகார துஷ்பிரயோகம்” என்றும் அவர் சாடினார்.
“நான் சபா மக்களுக்கு அச்சுறுத்தல் என்பது காரணமாக இருந்தால் அந்த குற்றச்சாட்டுக்காக நியாயமான விளக்கத்தைக் கொடுங்கள்” என்றும் நுருல் கேட்டுக் கொண்டார்.
“நான் தற்போது பெனாம்பாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் வழக்கறிஞருமான டேரல் லெய்கிங்குடனும், மற்ற வழக்கறிஞர் குழாமுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றேன். சபா மாநில முதலமைச்சருக்கு எதிராக கூடிய விரைவில் கோத்தாகினபாலு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்றும் நுருல் கூறினார்.
சபாவின் பாதுகாப்பு என்ற பெயரில் அரசியல் அடக்குமுறைகளை தேசிய முன்னணி அரசாங்கம் கடைப்பிடிக்கக் கூடாது என்றும் அதற்காக தேசிய முன்னணி அரசாங்கம் மக்கள் கூட்டணி தலைவர்களின் அரசியல் நடமாட்டத்தையும், நடவடிக்கைகளையும் தடைசெய்யக் கூடாது என்றும் நுருல் வலியுறுத்தினார்.