Home நாடு தமிழக பேராசிரியர் மு.இளங்கோவன் மலேசியா வருகை

தமிழக பேராசிரியர் மு.இளங்கோவன் மலேசியா வருகை

1092
0
SHARE
Ad

Elangovan-Profமே 31 – தமிழ் இணையத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவரும், தமிழக நாட்டுப் புறப் பாடல்களை நன்கு அறிமுகம் செய்பவருமான பேராசிரியர் மு.இளங்கோவன் (படம்) புதுச்சேரியிலிருந்து ஒரு வாரம் தமிழ் இலக்கியப் பயணமாக மலேசியாவுக்கு வருகை தரவிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

இவர் இங்கு பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார். மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில்கலந்துகொண்டு, கலை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாட உள்ளார்.

ஜூன் மாதம் 7 ஆம் தேதி  கோலாலம்பூரில் நடைபெறும் செவ்விலக்கியச் சிந்தனைகள், கட்டுரைக் களஞ்சியம் என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் ஏற்புரை வழங்க உள்ளார்.

மலேசியத் தமிழ் அறிஞர்களான .பொ.திருமாலனார், குறிஞ்சிக்குமரனார், முரசு. நெடுமாறன், முருகு. சுப்பிரமணியன், மலாயா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தனிநாயகம் அடிகளார், கவிஞர் வேலுசாமி ஆகியோரின் தமிழ்ப் பணிகளைக் கட்டுரைகளாக எழுதி இணையம் வழியாக உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்தவர் மு.இளங்கோவன்.

இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருதினை அந்நாட்டின் மேதகு குடியரசுத் தலைவரிடம் பெற்றவர் இவர்.

பல நூல்களை எழுதியவர் –  இணையத் தள பதிவாளர்

இதுவரை  19  நூல்களை எழுதியுள்ளார். ஆயிரத்திற்கும் மேலான ஆக்கங்களை இணையத்தில் பதிந்துள்ளார். மறைந்த தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை இணையத்தில் தேடுவோர் செல்லும் முதல் இணையதளமாக இவர் இணையதளம் இருக்கும் (muelangovan.blogspot.com, muelangovan.com).

மு.இளங்கோவன் அவர்கள் தமிழகத்தின் புகழ்பெற்ற ஊரானகங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்த இடைக்கட்டு என்ற சிற்றூரில் உழவர் குடியில்பிறந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டமும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

மேல்மருவத்தூர் அடிகளாரின் ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடங்கியவர். இந்திய அரசின் நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பெற்று இப்பொழுது புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறையில்பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.

நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி தமிழ் இலக்கண, இலக்கியங்களை விளக்கும் ஆற்றல் பெற்றவர். இவரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி அமெரிக்காவின் பெட்னா தமிழ் விழாவில் இவரை அந்தஅமைப்பு பாராட்டியுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, குவைத், அமெரிக்கா நாடுகளுக்கு இலக்கியப் பயணமாகச் சென்று ஆய்வுரை வழங்கியவர்.

ஒருவார இலக்கியப் பயணம்

மலேசியாவுக்குப் பலமுறை வருகை புரிந்துள்ள மு.இளங்கோவன் மலேசியாவின் புகழ்பெற்ற பல இலக்கிய அமைப்புகளில் பேசியுள்ளார்.

இவர் எழுதியுள்ள செவ்விலக்கியச் சிந்தனைகள் என்ற நூல் மலேசியா பல்கலைக் கழகத்தின் மொழித்துறையில் பணியாற்றும் மன்னர்மன்னன் அவர்களுக்கும், கட்டுரைக் களஞ்சியம் என்ற நூல் மலேசியாவில் ஆசிரியர் பணியாற்றும் .முனியாண்டி அவர்களுக்கும் படையல் செய்யப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலைஞர் தொலைக்காட்சி, கேப்டன் நியூஸ், பொதிகைத் தொலைக்காட்சி, புதிய தலைமுறைத் தொலைக்காட்சி, சன்நியூஸ் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இவர் நடவுப் பாடல்கள் என்ற தலைப்பில் பாடி வழங்கிய நிகழ்ச்சி இந்திய அரசின் பொதிகைத் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது.

ஒரு வாரப் பயணமாக மலேசியா வரும் முனைவர் மு.இளங்கோவன் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்.