கோலாலம்பூர், ஜூன் 3 – காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) (Independent Police Complaints and Misconduct Commission) அமைப்பது குறித்து, வரும் ஜுன் மாதம் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற முதல் அமர்வில், பக்காத்தானுடம் இணைந்து கோரிக்கை வைக்கத் தயாரா? என்று எதிர்கட்சிகள் சார்பாக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கேள்வியொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
“ஐபிசிஎம்சியை அமைக்க 89 பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, இன்னும் 23 தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தால், எளிய பெரும்பான்மையில் நாடாளுமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யலாம்” என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
மேலும் “ஐபிசிஎம்சி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ம.இ.கா கேட்டுக்கொண்டுள்ளது. அப்படியானால் ம.இ.கா வைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று அதை எடுத்துக்கொள்ள முடியுமா? அப்படி முடியும் என்றால் இன்னும் 19 தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தந்தால் மட்டுமே 13 ஆவது நாடாளுமன்றத்தில் ஐபிசிஎம்சி குறித்து கோரிக்கை வைக்க முடியும்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு இவ்விவகாரம் குறித்து பக்காத்தான் தலைவர்களோடு இன்று விவாதிக்கப்படும் என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழலையும் விசாரிக்க சார்பற்ற ஆணையமான ஐபிசிஎம்சி அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2005 ஆம் ஆண்டு அரச விசாரணை ஆணையம் பரிந்துரைத்தது.
ஆனால் காவல்துறையால் அந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“காவல்துறையின் பணிகளை மேலும் வளர்ச்சியடைச் செய்ய மற்றும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட ஐபிசிஎம்சி நடைமுறைப்படுத்த வேண்டும் அரச விசாரணை ஆணையம் பரிந்துரைத்தது. ஆனால் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்து, அதற்குப் பதிலாக நேர்மை காக்கும் ஆணையத்தை (Enforcement Agency Integrity Commission – EAIC) அமைத்தது” என்று லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.