ஜூன் 3 – 50 சிகரெட் பாக்கெட்டுக்களை கடத்தியதற்காக ஏர் இந்தியா விமான சேவையின் ஊழியர் ஒருவரை இலண்டன் காவல் துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
பவிக் ஷா என்ற அந்த ஊழியர் தனது குற்றத்தை ஒப்பியதைத் தொடர்ந்து 8 மணி நேரம் அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
பின்னர் ஏர் இந்தியா நிறுவனம், 5,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் ஜாமீன் கட்டி அந்த ஊழியரை விடுவித்தது. இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட ஊழியர் தற்காலிகமாக வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் நடந்தது.
மும்பாயிலிருந்து இலண்டன் வந்த விமானத்தின் ஊழியர்களின் பெட்டிகளை சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது 50 சிகரெட் பாக்கெட் கட்டுக்கள் இருந்த பெட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அந்த பெட்டி யாருடையது என்பதை விமான சேவை ஊழியர்கள் யாரும் ஒப்புக் கொள்ளாததைத் தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் சுங்கத் துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.
நான்கு மணி நேர விசாரணைக்குப் பின்னர் சிகரெட் கட்டுக்கள் இருந்த அந்த பெட்டி அந்த விமான சேவை ஊழியரான பவிக் ஷா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
அதன் பின்னர் பவிக் ஷா தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜாமீன் தொகையை செலுத்தியதைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த பவிக் ஷா விடுவிக்கப்பட்டார்.