Home வணிகம்/தொழில் நுட்பம் ஆசியாவில் அச்சு வடிவிலான செய்திப் பத்திரிக்கைகளின் விற்பனை தொடர்ந்து உயர்வு

ஆசியாவில் அச்சு வடிவிலான செய்திப் பத்திரிக்கைகளின் விற்பனை தொடர்ந்து உயர்வு

533
0
SHARE
Ad

Newspapers-sliderபேங்காக், ஜூன் 4 – முதிர்ச்சியான வாசகர்களைக் கொண்ட மேற்கத்திய  உலகில் இணையம் வாயிலான செய்தி சேவைகள் உயர்வு கண்டு வரும் வேளையில் அச்சு வடிவிலான செய்தித்தாள்களின் விற்பனையும் உயர்வு கண்டு வருவது ஆய்வின் வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பாங்காக்கில் அண்மையில் நடைபெற்ற செய்திப் பத்திரிக்கைகளின் உலக மாநாடு மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்களின் மாநாட்டில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இணைய வாயிலான செய்தி சேவைகள் உயர்வு கண்டாலும் அவற்றுக்கு கிடைக்கும் விளம்பர வருமானம் குறைவாகவே இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் 1,500 பதிப்பாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் பத்திரிக்கை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சமூக ஈடுபாடு அவசியம்

“செய்தி சேவைகளின் எதிர்காலம் அவர்கள் எவ்வளவு தூரம் பொதுமக்களுடன் தொடர்பு கொள்கின்றார்கள், இணைகின்றார்கள் என்பதிலும், சமுக விவகாரங்களில் எவ்வளவு தூரம் அவர்கள் ஈடுபடுகின்றார்கள் என்பதிலும்தான் இருக்கின்றது” என இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு தலைமை செயல் அதிகாரியான வின்சென்ட் பெரிக்னே தெரிவித்துள்ளார்.

விலைக்கு விற்கப்படும் அச்சு வடிவிலான பத்திரிக்கைகளின் விற்பனை சரிவு கண்டாலும், அச்சு, இணைய வடிவம் மற்றும் கையடக்கக் கருவிகள் மூலமாக ஒரே சமயத்தில் செய்திகளை வெளியிடுவதன் மூலம் அதிகமான வாசகர்களை அவர்களால் சென்றடைய முடிகின்றது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. அதே சமயம் விளம்பரத்தினால் கிடைக்கும் வருமானமும் கூடுகின்றது என்பதோடு பல நாடுகளில் விளம்பர வருமானமும் கூடி வருகின்றது.

இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வு அடிப்படையிலான சில சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு:-

·        உலகிலுள்ள வயதுக்கு வந்த மக்கள் தொகையில் பாதிக்கு மேல் ஒரு தினசரி செய்தித் தாளை  வாசிக்கின்றார்கள். 2,500 மில்லியன் செய்திப் பத்திரிக்கைகள் அச்சு வடிவில் வெளிவருகின்றன. அவற்றில் 600 மில்லியன் எண்ணிக்கையில் டிஜிட்டல் எனப்படும் இலக்கவியல் வடிவத்தில் வருகின்றன.

·        ஆண்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை செய்திப் பத்திரிக்கை தொழில் ஈட்டுகின்றது.

·        செய்திப் பத்திரிக்கைகளின் விநியோகம் 2012ஆம் ஆண்டில் உலக அளவில் 0.9 சதவீதம் சரிந்தது. ஆனால் ஆசியாக் கண்டத்தில் அதன் விநியோகமும் விற்பனையும் உயர்ந்தது. 2008க்கும் 2012க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பத்திரிக்கைகளின் விநியோகம் உலக அளவில் 2.2 சதவீதம் சரிவு கண்டது. அதிகமான சரிவு ஐரோப்பா கண்டத்தில்தான் நிகழ்ந்தது.

·        வட அமெரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் பத்திரிக்கை விநியோகம் 6.6 சதவீதம் வீழ்ச்சி கண்டது. மேற்கு ஐரோப்பாவில் 8.2 சதவீதம் வீழ்ச்சி கண்டது. மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்காவில் 1.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

·        ஆனால் ஆசியாவில் பத்திரிக்கை விநியோகம் 1.2 சதவீதம் உயர்வு கண்டது, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 3.5 சதவீதமும் லத்தின் அமெரிக்க நாடுகளில் 0.1 சதவீதமும் உயர்வு கண்டது.

·        பத்திரிக்கைகளின் விளம்பர வருமானம் உலக அளவில் 2008ஆம் ஆண்டு முதல் 22% சதவீதம் சரிந்தது. 2012ஆம் ஆண்டில் மட்டும் 2 சதவீதம் சரிந்துள்ளது. இந்த 5 வருட வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம், உலகின் மிகப் பெரிய விளம்பர சந்தையைக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் விளம்பர வருமானம் சரிந்ததுதான்.

·        கடந்த ஐந்தாண்டுகளில் அமெரிக்காவில் மட்டும் அச்சு வடிவிலான விளம்பரங்கள் 42 சதவீதம் சரிவு கண்டது. உலக அளவில் சரிந்த செய்திப் பத்திரிக்கைகளின் விளம்பர வருமானத்தில் இது முக்கால் பாகமாகும்.

·        அமெரிக்காவில் செய்திப் பத்திரிக்கைகளின் விளம்பர வருமானம் சரிந்ததற்குக் காரணம், ரக வாரியான (classified) விளம்பரங்கள் உயர்வு கண்டதுதான். பெரும்பாலான பதிப்பாளர்கள் இந்த வகை விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஏறத்தாழ 80 சதவீத ரகவாரியான விளம்பரங்கள் தற்போது டிஜிட்டல் எனப்படும் இலக்கவியல் வடிவத்தில் பதிப்பிக்கப்படுகின்றன.