கவுதமாலா சிட்டி, ஜூன் 5- 35 நாடுகள் கொண்ட அமெரிக்க கூட்டமைப்பின் வருடாந்திர மாநாட்டில் பங்கு பெறுவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி ( படம்) நேற்று, தனது முதல் லத்தீன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டார். ஆன்டிகுவா நாட்டில் நேற்று மாலை தொடங்கிய மூன்று நாள் மாநாட்டில் அவர் தமது குழுவினருடன் கலந்து கொண்டார்.
மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் அவர் அதிகாரத்துவத்தின் முக்கிய மாற்றங்கள் குறித்தும், இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களான மனித உரிமை, ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றைக் குறித்த கலந்தாலோசனைகளிலும் பங்கு கொள்வார்.
மேலும் அமெரிக்கா போதை மருந்துகளுக்கு எதிரான தன்னுடைய போர் வியூகத்தை மாற்றிக்கொள்ளாதது குறித்த சலிப்பு லத்தீன் அமெரிக்கர்களிடம் எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் உயிரிழக்க நேரிட்டதால். அதுகுறித்த தன்னுடைய மாற்றுத் திட்டங்களை அமெரிக்கா செயல்படுத்த வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, போதைப்பொருள் தடுப்பு குறித்தும் ஜான் கெர்ரி விவாதிப்பார் என்று அவருடன் சென்றுள்ள அதிகாரிகள் குழு தெரிவித்தது. மேலும், சீரழிந்துள்ள வெனிசுவேலா நாட்டுடனான உறவுமுறைகளை மேம்படுத்துவது குறித்தும், மனித உரிமைக் குழுவிற்கான அமெரிக்க உறுப்பினர் தேர்வு குறித்தும், அவர் சக உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் எனத் தெரிகின்றது.
மூன்று வருடங்களுக்கு முன்னரே, அமெரிக்க கூட்டமைப்பு குறித்த விவாதங்கள் அமெரிக்காவில் எழுந்தன. அப்போது, வெளியுறவுத்துறை செனட் உறுப்பினராக இருந்த கெர்ரி இதில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அமைப்பின் நிதிநிலை சீர்திருத்தங்கள் பற்றியும், சட்டசபையில் அவர் முறையிட்டிருந்தார். கடந்த திங்களன்று அமெரிக்க கூட்டமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பு என்றும், தன்னுடைய இரண்டு நாள் பங்களிப்பு இந்த அமைப்பினை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.