Home அரசியல் “யார் இந்த சாஹிட்? ஒரு குற்றவாளி உள்துறை அமைச்சரா?” – லிம் கிட் சியாங் கேள்வி

“யார் இந்த சாஹிட்? ஒரு குற்றவாளி உள்துறை அமைச்சரா?” – லிம் கிட் சியாங் கேள்வி

523
0
SHARE
Ad

Lim Kit Siangஜூன் 6 ஒரு தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் புதிய உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமிடி இனியும் உள்துறை அமைச்சராகத் தொடர்வது நியாயமா என ஜசெக ஆலோகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

“யார் இந்த லிம் கிட் சியாங் என ஆணவமாகவும், திமிராகவும் கேட்டுள்ள இந்த அகமட் சாஹிட் யார் என்பதைக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஜசெகவின் சட்டப் பிரிவுத் தலைவர் கோபிந்த் சிங் எழுப்பியுள்ள விவகாரம் தொடர்பில் சாஹிட் இனியும் உள்துறை அமைச்சராக தொடர்வது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது” என்றும் கிட் சியாங் கூறியுள்ளார்.

சாஹிட் தாக்கியதாக வழக்கு

கடந்த16 ஜனவரி 2006ஆம் நாள் அப்போது துணையமைச்சராக இருந்த அகமட் சாஹிட் தன்னை கண்ணில் குத்தியதாகவும் அதனால் தனது மூக்கு எலும்பு உடைந்ததாகவும், இடது கண் வீங்கி விட்டதாகவும் ஒரு வர்த்தகரான அமீர் அப்துல்லா பாஸ்லி வழக்கொன்றை தொடுத்திருந்தார்.

காஜாங் கண்ட்ரி ஹைட்ஸ் பகுதியில் உள்ள கிளப்பில் நடந்த இந்த சம்பவத்தை மறுத்த சாஹிட், இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இருப்பினும் அந்த மனுவை நீதிமன்றம் கடந்த 21 ஏப்ரல் 2010இல் தள்ளுபடி செய்தது.

பின்னர் அகமட் சாஹிட் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால் தான் அவமானத்திற்கும், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பதில் வழக்கொன்றை தொடுத்திருந்தார்.

ஆனால், கடந்த ஆண்டு, மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம் தாக்குதல் வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்து சாஹிட் 5,000 ரிங்கிட் செலவுத் தொகை செலுத்த வேண்டுமென ஏகமனதாக தீர்ப்பளித்தது. அந்த வழக்குக்கு பதிலளிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் சாஹிட்டுக்கு உத்தரவிட்டிருந்தது.

“இனியும் அமைச்சராக நீடிக்கலாமா” – கோபிந்த் சிங்கின் கேள்வி

இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்திருக்கும் ஜசெகவின் சட்டப் பிரிவுத் தலைவரும், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ, இந்த வழக்கு இன்னும் முடியாமல் இருப்பதால், அகமட் சாஹிட் காவல் துறை சம்பந்தப்பட்ட உள்துறை அமைச்சராக தொடர்வது முறையற்றதல்ல என்றும், வழக்கு முடியும் வரை அவரை தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்றும் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாக்கியதாக சுமத்தப்பட்டிருக்கும் வழக்குக்கு பதிலளிக்க நீதிமன்றம் பணித்துள்ளதால், சாஹிட் உள்துறை அமைச்சராக நீடிப்பது நியாயமல்ல என்றும் இதனால் அமைச்சர் பணியில் முரண்பாடுகள் ஏற்படும் என்றும் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

கோபிந்த் சிங்கின் அறைகூவலை மேற்கோள் காட்டி, தனது வலைத்தளத்தில் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள லிம் கிட் சியாங், அரசாங்கத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதாகக் கூறும் பிரதமர் நஜிப் முதலில் அகமட் சாஹிட்டை நீக்கி, அதனை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நேர்மைக்கும் சிறந்த நிர்வாகத்திற்காகவும் ஒரு சிறப்பு அமைச்சரை முதன் முதலாக நியமித்திருக்கும் பிரதமர் நஜிப் கோபிந்த் சிங்கின் வேண்டுகோளுக்கும் தகுந்த பதிலளிக்க வேண்டுமென லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

சாஹிட் துணையமைச்சராக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை நஜிப் அறிவாரா என்பதையும் இந்த தாக்குதலுக்காக ஏன் சாஹிட்டை காவல் துறையினர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டவில்லை என்றும் குறிப்பாக நஜிப் அறிவிக்க முன்வர வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

பால் லோ தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்

“பிரதமர் துறை அமைச்சரான பால் லோவும் இது குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அகமட் சாஹிட் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மீதான வழக்கை நீதிமன்றம் முடிவு செய்யும் வரையில் சாஹிட் அமைச்சராக நீடிப்பது முறையானதா என்ற தனது கருத்தையும் அமைச்சர் பால் லோ தெரிவிக்க வேண்டும்” எனவும் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

“ஒரு நபர் மீது தாக்குதலை நடத்தியதற்காக ஏன் காவல் துறையினர் சாஹிட் மீது இதுவரை குற்றவியல் வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை என்பதை இந்த வழக்கு விவகாரம் இயல்பாகவே ஒரு முக்கிய கேள்வியாக எழுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து மலேசியாவின் உள்துறை அமைச்சர் ஒரு குற்றவாளியா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது” என லிம் கிட் சியாங் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவற்றுக்கெல்லாம் தகுந்த பதிலை, நஜிப்போ அல்லது சாஹிட்டோ  நாடாளுமன்றம் முதன் முதலில் தொடங்கும் எதிர்வரும் ஜூன் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமெனவும் கிட் சியாங் கோரிக்கை விடுத்துள்ளார்.