Home இந்தியா காங்கிரஸ் தொகுதிகள் பறிபோயின குஜராத் இடைத்தேர்தலில் 6 இடங்களிலும் பா.ஜ வெற்றி

காங்கிரஸ் தொகுதிகள் பறிபோயின குஜராத் இடைத்தேர்தலில் 6 இடங்களிலும் பா.ஜ வெற்றி

657
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன் 6- குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வசமிருந்த 2 மக்களவை, 4 சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ அமோக வெற்றி பெற்றது.

narendra-modiகுஜராத்தில் காலியாக இருந்த போர்பந்தர், பனஸ்கந்தா ஆகிய 2 மக்களவை தொகுதிகளுக்கும், லிம்பாடி, மோர்வா ஹடாப், ஜெத்பூர், டோரஜ் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், பீகாரில் மகாராஜ்கஞ்ச் மக்களவை தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா மக்களவை தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் ஹண்டியா சட்டப்பேரவை தொகுதிக் கும் 2ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. குஜராத்தில் 2 மக்களவை தொகுதிகளையும், 4 சட்டப்பேரவை தொகுதிகளையும் காங்கிரசிடம் இருந்து பா.ஜ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

போர்பந்தரில் போட்டியிட்ட சர்ச்சைக்குரிய பா.ஜ வேட்பாளர் விதால் ரடாடியா, காங்கிரஸ் வேட்பாளரை 1.28 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், பனஸ்காந்தாவில் போட்டியிட்ட பா.ஜ வேட்பாளர் ஹரிபாய் சவுத்ரி, காங்கிரஸ் வேட்பாளரை 71 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் தோற்கடித்தனர்.

இவர்கள் இருவருமே காங்கிரசில் இருந்து பா.ஜ.வுக்கு தாவியவர்கள். காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த ரடாடியா, கடந்தாண்டு சுங்கச் சாவடி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதால் பெரும் சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த மார்ச்சில் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்தார். அப்போது பா.ஜ.வில் இணைந்த இவருடைய மகன் ஜெயேஷும், ஜெத்பூர் சட்டப்பேரவை தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

லாலுவுக்கு வெற்றி

பீகாரில் மகாராஜ்கஞ்ச் மக்களவை தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தை(ஆர்ஜேடி) சேர்ந்த பிரபுநாத் சிங், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் பி.கே.ஷகியை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த தொகுதி ஏற்கனவே ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் இருந்தது. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிதேந்திர சுவாமிக்கு 22 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

வெற்றியால் லாலு உற்சாகம் அடைந்துள்ளார். முதல்வர் நிதிஷ் குமாரின் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பை இந்த வெற்றி வெளிப்படுத்துவதாகவும், மக்களவை தேர்தலில் இம்மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் தனது கட்சி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஹவுரா மக்களவை தொகுதியை மார்க்சிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தக்க வைத்து கொண்டது.

உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடந்த ஹண்டியா சட்டப்பேரவை தொகுதியை ஆளும் சமாஜ்வாடி கட்சி 26 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை தோற்கடித்து தக்க வைத்து கொண்டது.

காங்கிரசுக்கு இழப்பு

தேர்தல் நடைபெற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. குஜராத்தில் எல்லா தொகுதிகளிலும் பா.ஜ வெற்றி பெற்றது மூலம், மோடியின் செல்வாக்கு அதிகமாகி உள்ளது.