கோலாலம்பூர், ஜூன் 6 – தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை குறித்து பாதுகாப்பு அறிக்கை எதையும் சுகாதார அமைச்சு வழங்கவில்லை என்றும், அவ்வறிக்கையை வழங்குமாறு தேர்தல் ஆணையமும் கோரிக்கை வைக்கவில்லை என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அழியா மையால் ஏற்படும் புற்று நோய் அபாயத்தைத் தடுப்பதற்காக அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில்வர் நைட்டிரேட் என்ற வேதிப் பொருளை ஒரு சதவிகிதம் நீர்மைப்படுத்த வேண்டியிருந்தது என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அது குறித்து சுப்ரமணியத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அது எனக்குத் தெரியாது. தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எங்களிடம் அறிக்கை எதுவும் கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
சில்வர் நைட்ரேட்டால் புற்று நோய் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்த பின்னர், அழியாமையில் அது மிகக் குறைவான அளவே சேர்க்கப்பட்டது என்று கடந்த மே 12 ஆம் தேதி சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசூப் தெரிவித்திருந்தார்.
அதோடு அந்த மையில் 1 சதவிகிதத்துக்கு மேல் சில்வர் நைட்ரேட் சேர்த்தால் அது சிறுநீரகத்தைச் சேதப்படுத்துவதுடன், புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்று சுகாதார அமைச்சிடமிருந்து தங்களுக்கு கடிதம் ஒன்று வந்ததாகவும் அந்த நேர்காணலில் அஜீஸ் குறிப்பிட்டுள்ளார்.