Home அரசியல் ஒருவர் மாநில அமைச்சர்! ஒருவர் துணையமைச்சர்! இன்னொருவரோ சிறையில்! – எங்கே செல்லும் ஹிண்ட்ராப் பயணம்?

ஒருவர் மாநில அமைச்சர்! ஒருவர் துணையமைச்சர்! இன்னொருவரோ சிறையில்! – எங்கே செல்லும் ஹிண்ட்ராப் பயணம்?

723
0
SHARE
Ad

uthayakumarஜூன் 7  – விதியின் விளையாட்டு இப்படியெல்லாம் நடக்குமோ என்று அனைவரும் வியந்து நிற்கும் வண்ணம், மலேசிய அரசியல் அரங்கில் ஹிண்ட்ராப்இயக்கத்தின் பயணம் எப்படி எப்படியோ திசைமாறி போய்க் கொண்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

2007ஆம் ஆண்டில் தொடங்கிய ஹிண்ட்ராப் போராட்டம், ஒரு துணிச்சலான மாபெரும் பேரணி மூலம் கோலாலம்பூரின் முக்கிய வீதிகளில் மலேசிய இந்தியர்களைக் கொண்டு வந்து குவித்தது.

ஆனால், அன்றைய மத்திய அரசாங்கம் பேரணியின் தாக்கத்தால் விழித்துக் கொண்டது. பிரச்சனையை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற நோக்கத்துடன், பேரணியை ஏற்பாடு செய்த ஐந்து முக்கிய தலைவர்களை அப்போது நடப்பில் இருந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசிய முன்னணி அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்தது.

ஹிண்ட்ராப் போராட்டத்தால் ஏற்பட்டது அரசியல் மாற்றம்

ஆனால், கால ஓட்டத்தில் 2008இல் தேசிய முன்னணி சந்தித்த வரலாறு காணாத தோல்வியைத் தொடர்ந்து அரசியல் சூழ்நிலைகள் மாறின, மக்களின் சிந்தனைகளும் மாறின. அரசியல் தலைவர்களின் அணுகுமுறைகளும் மாறின.

சிறை சென்ற காரணத்தால் அடைந்த பிரபல்யத்தால், ஹிண்ட்ராப் தலைவர்களும் தங்களின் சொந்த அரசியல் பாதைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினார்கள். அதில் ஏற்பட்ட முரண்பாடுகள், அவர்களுக்கிடையில் மன வேற்றுமையை – கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது.

ஆளுக்கொரு திசையாக, அவரவர்கள் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கினார்கள் ஹிண்ட்ராப் தலைவர்கள்.

13வது பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் இந்த கால கட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத புதிய பரிமாணத்தில், யாருமே கற்பனை செய்து பார்த்திர முடியாத ஒரு சூழலில் வந்து நிற்கின்றது ஹிண்ட்ராப் பயணம்.

எந்த தேசிய முன்னணி அரசாங்கத்தை எதிர்த்து நாட்டை விட்டு வெளியேறினாரோ – எந்த அரசாங்கத்தின் மனித உரிமை சீர்கேடுகளை உலக மன்றத்திற்கும் மற்ற நாடுகளுக்கும் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்தாரோ – அதே அரசாங்கத்தோடு கைகோர்த்துக் கொண்ட வேதமூர்த்தி இன்றைக்கு அதே அரசாங்கத்தில் துணையமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டார்.

மக்கள் கூட்டணியும் ஹிண்ட்ராப் பிரதிநிதிக்கு ஆதரவு

KLANGஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவினரின் ஆதரவு இன்னும் எங்கள் பக்கம் இருக்கின்றது என்பதைக்  காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்  வேதமூர்த்தியின் நியமனத்தால் மக்கள் கூட்டணிக்கு ஏற்பட்டது.

அதன் காரணமாக, சிலாங்கூர் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற கணபதிராவை சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக  மக்கள் கூட்டணி நியமித்தது.

மாநில அரசில் ஒரே ஒரு இந்தியர் பிரதிநிதித்துவம் மட்டும்தான் இருக்க முடியும் என்ற நிலையில், ஹிண்ட்ராப்பைச் சேர்ந்த கணபதி ராவைச் சேர்த்துக் கொள்ள மக்கள் கூட்டணி காட்டிய ஆர்வத்தால், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சிக் குழு உறுப்பினராக சிறப்பாகவே சேவையாற்றியிருந்தாலும் சேவியர் ஜெயகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை – அவருக்கு ஹிண்ட்ராப் பின்னணி இல்லையென்ற காரணத்தால்!

மற்றொரு ஹிண்ட்ராப் சிறைக் கைதியான வசந்தகுமார் பிகேஆர் கட்சி சார்பில் தாப்பா தொகுதியில் ம.இ.கா தேசிய உதவித் தலைவர் சரவணனுக்கு எதிராக நிறுத்தப்பட்டார். ஆனால் தோல்வி கண்டார்.

உதயகுமாரின் அதிரடி நடவடிக்கை

சமூகப் பிரச்சனைகளுக்கான போராட்டமாக தொடங்கிய ஹிண்ட்ராப் போராட்டம் இன்றைக்கு இரு சகோதரர்களுக்கு இடையிலான போராட்டமாக – அவர்களின் சுய கௌரவத்தையும், அவர்களில் யார் முக்கியமானவர், யார் அதிகமாக தியாகம் செய்தவர் என்ற ஒப்பீடுகளுக்குள் உள்ளடங்கும் சர்ச்சையாக போய்விட்டதுதான் இன்றைய ஹிண்ட்ராப்பின் பரிதாப நிலை.

மூத்த சகோதரர் உதயகுமார், மனித உரிமைக் கட்சி என்ற பெயரில் தனியாக கட்சி தொடங்கினார் – அனுமதி கிடைக்கவில்லை.

மக்கள் கூட்டணியோடு இணைவதற்கு மோதிப் பார்த்தார் – அதுவும் நடக்கவில்லை.

பொதுத் தேர்தலில் சுயேச்சையாக சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் போட்டியிட்டார் – அதிலும் தோல்வி.

தம்பி, அரசாங்கத்தில் துணையமைச்சராக பதவியேற்கின்ற அதே நாளில் வரப்பிரசாதமாக வந்து அமைந்தது உதயகுமாருக்கு ஒரு வாய்ப்பு. அன்றைய தினத்தில்தான் உதயகுமார் மீது தொடுக்கப்பட்டிருந்த பழைய தேச நிந்தனை வழக்கு விசாரணைக்கு வந்தது.

உதயகுமார் ஏன் மௌனம் காத்து தண்டனை பெற்றார்?

waythaகாந்தீய வழியில், மௌனத்தை எதிர்வாதமாக வைத்த காரணத்தால், 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மூத்த சகோதரர் சிறை சென்ற அதே நாளில், இளையவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், துணையமைச்சராகவும் மகுடம் சூட்டிக் கொள்ளும் விதியின் விளையாட்டு அரங்கேறியுள்ளது.

தான் தண்டனை பெற்று சிறைவாசம் சென்றால் அதன்மூலம் துணையமைச்சர் என்ற அந்தஸ்தைப் பெற நினைத்த வேதமூர்த்தியின் பெருமைகள் எல்லாம் மங்கி, மக்கி விடும் என்ற கணக்கோடுதான் உதயகுமார் மௌனம் காத்து தண்டணை பெற்றார் என்பது அனைவருக்குமே உள்ளங்கை நெல்லிக்காயாக புரிந்து விட்டது.

அவர் எதிர்பார்த்ததைப் போலவே, இன்றைக்கு இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் பேச்சாக இருப்பது – அவர்களில் பெரும்பாலோரின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – உதயகுமார் சிறை சென்றுள்ள சம்பவமே தவிர, வேதமூர்த்தியின் துணையமைச்சர் நியமனமல்ல!

அந்த வகையில் சிறைவாசத் துன்பத்தை அனுபவித்தாலும், நான்தான் போராட்டவாதி, என் தம்பியல்ல என்ற வாதத்தை நிரூபிக்கும் வகையில்தான் உதயகுமாரின் செயல்பாடு இருக்கின்றதே தவிர, வேறு தகுந்த காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

உதயகுமார் எதிர்வாதம் புரிந்து விடுதலையாகியிருக்கலாம்

காரணம், அன்றைய பிரிட்டிஷ் பிரதமருக்கு கடிதம் எழுதியது நியாயம்தான் என்பதை நிரூபிக்கும் அருமையான வாய்ப்பும், தன் மீது சுமத்தப்பட்ட தேச நிந்தனைக் குற்றத்தை எதிர்த்து வழக்காடி, ஹிண்ட்ராப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகக் கூடிய வாய்ப்பும் – ஹிண்ட்ராப் போராட்டத்துக்கான காரணங்களை இன்றைக்கும் உயிர்ப்புடன் வைத்திருக்கக் கூடிய வாய்ப்பும் உதயகுமாருக்கு இருந்தது.

உதயகுமார் முறையாக எதிர்வாதம் செய்திருந்தால், அவர் இந்த தேச நிந்தனை வழக்கிலிருந்து விடுதலையாகக் கூடிய வாய்ப்பும் நிறையவே இருந்தது.

இருப்பினும், அந்த வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்காமல், தான் சிறைக்கு செல்லவேண்டும், அதன் மூலம் மக்களின் அனுதாபத்தைப் பெற வேண்டும், அதன் மூலம் தனது தம்பிக்கு துணையமைச்சர் நியமனத்தால் கிடைக்கக் கூடிய புகழ் வெளிச்சத்தை மங்கச் செய்ய வேண்டும், வேதமூர்த்தியின் பெயரை மழுங்கடிக்கச் செய்யவேண்டும் என்ற குறிக்கோளில்தான் உதயகுமார் சிறைவாசத் துன்பத்தையும் அனுபவிக்கத் தயாராகிவிட்டார்.

அதற்கேற்றாற்போல், ஏற்கனவே ம.இ.காவின் எதிர்ப்பையும், பொதுமக்களின் அதிருப்தியையும் தனது துணையமைச்சர் நியமனத்தால் பெற்றிருக்கும் வேதமூர்த்தி தனது சொந்த சகோதரனைக் குற்றம் சாட்டி சிறையில் அடைக்கும் ஓர் அரசாங்கத்தில் துணையமைச்சராக இருப்பது அவருக்கு மக்கள் மத்தியில் மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருக்கின்றது.

வேதமூர்த்தியும் இதைத் தானே செய்தார்?

Hindraf-Logoஅதைவிட முக்கியம் என்னவென்றால், உதயகுமார் எந்த குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாரோ அதே கால கட்டத்தில் அதே போன்ற குற்றங்களை வேதமூர்த்தியும் வெவ்வேறு கோணங்களில் ஹிண்ட்ராப் போராட்ட காலங்களில் புரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக ஆளுக்கொரு திசையாக, ஹிண்ட்ராப் தலைவர்கள் தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக பயணப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க, ஹிண்ட்ராப் ஆரம்பிக்கப்பட்டதன் உயரிய நோக்கங்கள், அதன் உன்னத போராட்ட உணர்வுகள்  இன்றைக்கு சின்னாபின்னமாக்கப்பட்டு விட்டன.

இந்தியர்களின் அவல நிலைமைக்காக அன்று ஒருமித்த குரலில், ஒரே உணர்வோடு, ஒற்றுமையாக, தங்களின் உடல் உழைப்பையும், நேரத்தையும், அறிவாற்றலையும் தியாக உணர்வுடன் வழங்குவதற்கு முன்வந்த அறிவார்ந்த இளைஞர் தலைவர்கள் இன்றைக்கு எதிரும் புதிருமாக நிற்கின்றார்கள்.

அவர்கள் பின்னால் ஹிண்ட்ராப் தொண்டர்கள் என்ற பெருமை மிக்க உணர்வோடு அணிவகுத்து நின்ற ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் இன்றைக்கு யார் பக்கம் நிற்பது, யார் சொல்வதும், செய்வதும் நியாயம் என்பது தெரியாத குழப்பத்தில் உள்ளனர்.

பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் – நீதி கேட்போம் –  இலட்சக் கணக்கில் நஷ்ட ஈடு கேட்போம் என்ற முழக்கங்களுக்காகவீர வசனங்களைக் கேட்டு காவல் துறையினரின் தடியடிகளையும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் தாங்கி, வீதிகளில் திரண்ட இந்தியர்கள், தங்களின் போராட்டம் விழலுக்கிறைத்த நீராயிற்றே என நெஞ்சம் விம்மி, செய்வதறியாது நிற்கின்றனர்.

ஹிண்ட்ராப் போராட்டத்தால் விளைந்த அரசியல் மாற்றங்களால் எதிர் கட்சிகள்தான் இலாபம் அடைந்தனவே தவிர அதனால் ஹிண்ட்ராப் இயக்கமோ, அதன் அடிமட்டத் தொண்டர்களோ பலன்கள் எதையும் அனுபவிக்கவில்லை. தியாகத் தழும்புகளைத்தான் பரிசாகப் பெற்றார்கள்!

கணபதி ராவின் சிலாங்கூர் ஆட்சிக் குழு நியமனம் கூட அவர் நீண்ட காலமாக சார்ந்திருக்கும் ஜ.செ.கவினால் வந்ததே தவிர, முழுக்க முழுக்க ஹிண்ட்ராப்பால் வந்தது என்று சொல்லிவிட முடியாது. ஹிண்ட்ராப் அடையாளம் அவரது அரசியல் வளர்ச்சிக்கு உதவியுள்ளது என்பது மட்டும் உண்மை.

ஹிண்ட்ராப் போராட்டத்தின் பலனை ஒட்டு மொத்தமாக இன்றைக்குப் பெற்றிருப்பவர் – அறுவடை செய்திருப்பவர்  வேதமூர்த்தி ஒருவர்தான்!

இப்படியாக மாறி மாறி வரும் கற்பனைக்கு எட்டாத அரசியல் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது ஹிண்ட்ராப் இயக்கம்!

இனி அடுத்து எங்கே செல்லும் இந்த   ஹிண்ட்ராப் பயணம்? யார்தான் அறிவார்?

-இரா.முத்தரசன்