ஜூன் 8 – கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் மகளிருக்கான உலக மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் மங்கோலியாவின் மகளிர் குழு, மர்மமான முறையில் மரணமடைந்த மங்கோலிய பிரஜை அல்தான்துயா ஷாரிபுவின் மரணம் குறித்த பதில்களை மலேசிய அரசாங்கம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மங்கோலியா மகளிர் பேரவையின் தலைவரான ஜே.எர்டன்சிமெக், மாநாட்டின் இடைவேளையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, அல்தான்துயாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்த புதிய விசாரணை தொடங்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
“குறிப்பாக, மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சுக்கு நாங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகின்றோம். அவர்கள் இந்த பிரச்சனை குறித்து அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடிய விரைவில் இது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
தாயார் இல்லாமல் வளர்ந்து வரும் அல்தான்துயாவின் இரண்டு மகன்களின் நலன்களுக்காகவும், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி கிடைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
எங்களின் இந்த கோரிக்கைகள் எல்லாம் அல்தான்துயாவின் தந்தையின் வேண்டுகோளின்படிதான் விடுக்கப்படுகின்றது என்றும் அல்தான்துயாவின் குடும்பத்தின் சார்பாகவும் விடுக்கப்படுகின்றது என்றும் மங்கோலியா மகளிர் பிரதிநிதிகள் கூறினர்.
அல்தான்துயாவின் தந்தை மலேசியாவில் இந்தப் பிரச்சனையை எழுப்புமாறு தங்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், மலேசியாவில் தங்களின் தாயார் ஏன் மரணமடைந்தார், என்ன காரணத்துக்காக மரணமடைந்தார் என்பதை அல்தான்துயாவின் பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தாங்கள் இந்த பிரச்சனையை எழுப்புவதாகவும் மங்கோலிய மகளிர் பிரதிநிதிகள் கூறினர்.