கோலாலம்பூர், ஜூன் 10 – பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் விவகாரத்தில், அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி உட்பட யாரையும் தாங்கள் மிரட்டவில்லை என்றும், மாறாக கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நினைவுறுத்தியே தான் அறிக்கைவிட்டதாகவும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.
“பேரா மாநில சபாநாயகர் பதவி ம.இ.காவுக்கு வழங்கப்படுவதாக பொதுத்தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதுவும் மாநில ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஆர்.கணேசனுக்கு அப்பதவி வழங்கப்படும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அப்போதைய தற்காப்பு அமைச்சராக இருந்த சாகிட் ஹமீடியும் வாக்குறுதி அளித்திருந்தனர்” என்று பழனிவேல் குறிப்பிட்டார்.
மேலும் “சபாநாயகர், மாநில மந்திரி பெசார் ஆலோசகர் பதவி, சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகள் ம.இ.காவிற்கு வழங்கப்பட வேண்டும். நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பேரா மாநிலத்தில் இந்தியர்களின் வாக்குகள் தேசிய முன்னணியின் பக்கம் திரும்பியதை யாரும் மறுக்க முடியாது. எனவே நாங்கள் எங்களது உரிமையை கேட்கிறோமே தவிர யாரையும் மிரட்டவில்லை. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. எதிர்கட்சியினர் பேரா மாநிலத்தில் ஆட்சியமைத்த போது இந்தியர் ஒருவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. அதே போல் இப்போது தேசிய முன்னணி ஆட்சியில் அப்பதவியை இந்தியர்களுக்கு கொடுப்பது தான் நியாயமானது” என்று பழனிவேல் தெரிவித்துள்ளார்.
அதோடு “சட்டமன்றத்தில் அனைத்து இனமக்களும் அமர வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம். எனவே இதை நாங்கள் மிரட்டுவதாக யாரும் நினைக்க வேண்டாம். மாநில மந்திரி பெசாரும், பிரதமரும் இதற்கு உடனடியாக பதிலளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.