புதுடெல்லி, ஜுன் 12- தமிழக போலீஸ் அதிகாரி விஜயகுமார் (படம்).
இவரது தலைமையிலான அதிரடிப்படை தமிழக-கர்நாடக எல்லையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பிடிபடாமல் ஏராளமான கொலை மற்றும் சந்தன கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட வீரப்பனை வேட்டையாடியது.
அதன்பிறகு அவர் ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமி தலைவராக நியமிக்கப்பட்டார்.
2010-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டைரக்டர் ஜெனரல் ஆனார். பணி ஓய்வு பெற்ற பின்பு 2012-ம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் முதன்மை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் ஜார்க்கண்ட் மாநில கவர்னரின் ஆலோசகராக இருந்து வருகிறார்.
தற்போது விஜயகுமாரை மத்திய அரசு மீண்டும் டெல்லிக்கு அழைத்துள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படைக்கு தலைவராக நியமிக்கப்பட உள்ளார். தற்போது சத்தீஷ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் பரவி வருகிறது.
சமீபத்தில் சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 28 பேர் பலியானார்கள். தாக்குதலில் குண்டு காயம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா 18 நாட்களுக்கு பிறகு நேற்று மரணம் அடைந்தார். மாவோயிஸ்டுகள் பிரச்சினை மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
அதை ஒழித்தாக வேண்டும் என்ற முடிவில் மத்திய உள்துறை அமைச்சகம் இருக்கிறது. எனவே தான் வீரப்பனின் கொட்டத்தை ஒடுக்கி வனப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்திய விஜயகுமாருக்கு மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே விஜயகுமாரை உள்துறை அமைச்சக பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. ஆனால் அவருக்கு ஜார்க்கண்ட் கவர்னரின் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தற்போது மீண்டும் உள்துறை அமைச்சக பணிக்கு வந்து மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் படைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.