புதுடெல்லி, ஜூன் 12- பிரதமர் மன்மோகன் வரும் 25ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காஷ்மீர் வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்றைய தினம் மாநிலம் தழுவிய அளவில் கடையடைப்பு நடத்தப்படும் என ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கூறியிருந்தார்.
கடையடைப்புக்கு மற்றொரு பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷாவும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் திட்டமிடப்பட்ட 2 நாள் காஷ்மீர் பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பயணத்தின்போது ஜம்முவில் உள்ள பனிஹல்-காசிகுண்ட் பகுதிகளை இணைக்கும் 11 கி.மீட்டர் நீள புதிய ரெயில் சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைக்க இருந்தார்.
காஷ்மீரின் ஷோபியன் பகுதியை ஜம்முவில் உள்ள பூஞ்ச் பகுதியுடன் இணைக்கும் புதிய நெடுஞ்சாலையையும் அவர் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதமரை சிறப்பான முறையில் வரவேற்று மேலும் பல மாநில திட்டங்களுக்கு நிதியுதவி பெறும் கனவுடன் காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா பிரதமரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் காஷ்மீர் பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
ஷோபியன்-பூஞ்ச் நெடுஞ்சாலைக்கு இடையே 7 பாலங்கள் கட்டப்பட வேண்டியுள்ளதால் சாலையை திறக்க இயலாது. அதனால்தான் பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டது என அரசு தரப்பு கூறுகிறது.
யாசீன் மாலிக் அறிவித்திருந்த கடையடைப்பு போராட்டத்தினால் சட்டம்-ஒழுங்கு சீர்குலையக்கூடாது என்ற எண்ணத்தில் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர்.