புதுடெல்லி – தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மூன்று மாநிலங்களுக்கும் 20 ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற வியூகம் பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதுகிறார் முன்னாள் அதிரடிப் படைத்தலைவர் விஜயகுமார்.
தற்போது மத்திய உள்துதுறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வரும் விஜயகுமார், கடந்த 2004-ம் ஆண்டு, வீரப்பனைத் தேடும் அதிரடிப்படைக்குத் தலைமை வகித்தார்.
அவ்வாண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி, விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை வீரப்பனை சுட்டுக் கொன்றது.
வீரப்பனை சுட்டுக் கொன்ற அந்த நடவடிக்கை பற்றி, சுமார் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதி வருகின்றார்.
இது பற்றி விஜயகுமார் கூறுகையில், ‘‘வீரப்பன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதைச் சரியாகவும் முறையாகவும் கூறுவதே எனது நோக்கம். 10 மாதம் திட்டமிடப்பட்டு அந்த ஆப்ரேஷனை வெற்றி கரமாக நடத்தினோம். அதிரடிப்படையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் காலவரிசைப்படி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். இது உண்மையான கதையாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.