ஜாகர்த்தா, ஜூன் 17 – நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் 40,000 வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களை மலேசியாவிற்கு அழைத்து வந்து வாக்களிக்க வைத்தோம் என்று தேசிய முன்னணி மீது எதிர்கட்சியினர் நம்பமுடியாத வகையில் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களின் பொய் குற்றச்சாட்டை நம்பி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து விட வேண்டாம் என்று வெளிநாட்டுகளில் படித்து வரும் மலேசிய மாணவர்களை பிரதமர் நஜிப் துன் ரசாக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“எதிர் கட்சியினரின் வீண்பழிகளும், பொய்யான குற்றச்சாட்டுகளும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அக்குற்றச்சாட்டை மாணவர்களும் நம்பியுள்ளனர். எதிர்கட்சிகள் கூறுவது போல் எப்படி 40,000 வங்காள தேசிகளை வாக்களிப்பு மையங்களுக்கு அழைத்து வர முடியும். அவர்களைக் கொண்டு வருவதற்கு 100 பெரிய விமானங்கள் தேவைப்படும், அதோடு விமான நிலையத்திலிருந்து அவர்களை அழைத்து வர 1000 பேருந்துகளாவது வேண்டும். இது எப்படி சாத்தியமாகும் என்பதை மாணவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேசிய முன்னணி அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் பொதுத்தேர்தல், எல்லா சட்டவிதிகளுக்கும் உட்பட்டு தான் நடந்துள்ளது.”என்று நேற்று மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதரகத்திலுள்ள மண்டபத்தில், மலேசிய மாணவர்களுடனான மதிய உணவு விருந்தில் கலந்து கொண்ட நஜிப் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதமருடன் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், மலேசியாவுக்கான இந்தோனேசியத் தூதர் டத்தோ சைட் முன்சி அப்ஜா ருடின் சைட் ஹசான் மற்றும் அவரது துணைவியார் டத்தின் ஷரிபா இக்லாஸ் சைட் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.