புது டில்லி, ஜூன் 17 – இந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனமான டாட்டா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரத்தன் டாட்டா (படம்), அதன் கௌரவத் தலைவராக தற்போது இயங்கி வருகின்றார்.
இந்நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்தின் தலைமை ஆலோசகராக ரத்தன் டாட்டா நியமிக்கப்பட்டுள்ளதாக, ஏர் ஆசியா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ டோனி பெர்னான்டஸ் அறிவித்துள்ளார்.
“வர்த்தகத்தில் உலக அளவில் சக்கரவர்த்தியாகக் திகழும் ரத்தன் டாட்டாவை ஆலோசகராகப் பதவியேற்கச் செய்வது அவ்வளவு சுலபமானதாக இல்லை. எல்லா வகையிலும் திறன்வாய்ந்தவரான அவர் ஒரு பலமான நிர்வாகக் குழுவை அமைப்பார். ஏர் ஆசியா நிறுவனம் வெற்றியடைய, நல்ல முறையில் உருவாக்கம் பெற ரத்தன் டாட்டாவைப் போன்று அளவற்ற அனுபவம் கொண்ட ஒருவர் இருப்பது முக்கியமாகும்” என்று டோனி பெர்ணான்டஸ் மேலும் கூறினார்.
ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தில் டாட்டா குழுமம் 30 சதவீதப் பங்குகளை வைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் ஆசியா இந்தியாவின் தலைவர் யார்?
இதற்கிடையில் ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்கப் போகின்றவரின் பெயர் அடுத்த ஓரிரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏர் ஆசியாவின் தலைவர் ஒரு மாபெரும் மனிதர் என்றும் தனது பிரமிக்கத்தக்க அனுபவத்தை, இயக்குநர் வாரியத்திற்கு அவர் பங்களிப்பு செய்வார் என்றும் டோனி பெர்ணான்டஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம், 33 வயதான மிட்டு சண்டில்யா என்பவரை தனது தலைமைச் செயல்முறை அதிகாரியாக ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் நியமித்தது.
அதனைத் தொடர்ந்து ஏர் ஆசியா இந்தியா குறித்து கருத்துரைத்துள்ள டோனி பெர்ணான்டஸ் “ஏர் ஆசியா இந்தியா சிறப்பான முறையில் உருவாக்கம் கண்டு வருகின்றது. ஒரு சிறந்த தலைமைச் செயல்முறை அதிகாரியையும் நிர்வாகத் திறமையுள்ள பல நல்ல உயர்நிலை அதிகாரிகளையும் நாம் பெற்றிருக்கின்றோம். அனுபவம் வாய்ந்த வர்த்தகப் பிரமுகர் ஒருவரை தற்போது ஆலோசகராகப் பெற்றுள்ளோம்” என பெருமிதத்துடன் டோனி பெர்ணான்டஸ் சமூக வலைத் தளம் ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.