புத்ரா ஜெயா, ஜூன் 18 – வரும் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
மேலும் இதுவரை பல்வேறு துறைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகளை உள்ளடக்கிய 96 அறிக்கைகள் நிதி அமைச்சகத்திற்கு வந்திருப்பதாகவும், அவைகளில் பெரும்பாலானவை அரசாங்க திட்டங்களில் அடங்கியுள்ளன என தான் நம்புவதாகவும் நஜிப் கூறினார்.
“பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை கவனத்தில் கொண்டு இந்த புதிய வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்திற்கான கொள்கை ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மற்றும் உருமாற்றங்களை அதிகரித்தல்” என்று புத்ரா ஜெயாவில் இன்று நடைபெற்ற 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத்தில் பிரதமர் நஜிப் அறிவித்தார்.