புதுடெல்லி, ஜூன் 19- இந்தியாவில் முதன் முறையாக சீன திரைப்பட திருவிழா நடைபெறுகிறது.
இதன் துவக்க விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜாக்கிசான் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த திரைப்பட விழாவில் ஜாக்கிசான் இயக்கி நடித்துள்ள ‘தி சைனீஸ் ஜோடியாக்‘ என்ற படம் முதல் படமாக திரையிடப்பட்டது.
முன்னதாக ஜாக்கிசான் பாத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் இந்தியாவில் 10 வருடங்களுக்கு முன் மல்லிகா ஷெராவத்துடன் ‘தி மித்‘ திரைப்படத்தில் நடித்தேன். அந்த படப்பிடிப்பின் போது 4 மாதங்கள் இங்கு தங்கி இருந்தேன். அப்போது நான் பல இந்திய படங்களை பார்த்தேன்.
பாட்டுப்பாடுவதும் ஆடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நல்ல பாடகர். இந்திய இயக்குனர்கள் நல்ல கதாபாத்திரத்துடன் என்னை அழைப்பார்கள் என்று நம்புகிறேன்.
நான் நன்றாக சண்டை போடுபவன் மட்டும் அல்ல, நல்ல நடிகனும் கூட. 3 இடியட்ஸ் மட்டும் இல்லாமல் பாலிவிட்டில் பல நல்ல படங்கள் உள்ளன. அவை பிரபலமாகும் வகையில் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஜாக்கிசானுடன் 20 பேர் கொண்ட குழுவும் இந்தியா வந்துள்ளது. நேற்று தொடங்கிய இந்த விழா வரும் 23 -ம் தேதி வரை நடைபெறுகிறது.