Home அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்கும் புதிய குழுவிற்கு அன்வார் கண்டனம்

பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்கும் புதிய குழுவிற்கு அன்வார் கண்டனம்

323
0
SHARE
Ad

anwar-najibபெட்டாலிங் ஜெயா, ஜூன் 19- நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை  நிர்வகிக்க நியமிக்கப் பட்டிருக்கும்,பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான புதிய குழுவிற்கு எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய குழுவால் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதகமான விளைவே ஏற்படப்போகிறது என்றும்,தேசிய நிதிப் பற்றாக்குறையை வரும் 2015 ஆம் ஆண்டிற்குள் 3 சதவிகிதமாக குறைப்பதாக பிரதமர் நஜிப் அளித்துள்ள வாக்குறுதியை தான் குறித்து வைத்துக்கொள்வதாகவும் அன்வார் சூளுரைத்துள்ளார்.

“கடுமையான பொருளாதார நிர்வாகத்தின் மூலமும், வெளிப்படையான அரசாங்க கொள்முதல் மூலமும் தேசிய நிதிப் பற்றாக்குறையை எளிதாகக் குறைக்கலாம். மாறாக  புதிய வரிகளை உருவாக்குவதன் மூலமோ அல்லது அடிப்படையான அரசாங்க செலவீனங்களைக் குறைப்பதன் மூலமோ அதை அடைய நினைத்தால், அது மக்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும்” என்று இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிகேஆர் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அன்வார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் நஜிப் மற்றும் தேசிய முன்னணி அரசாங்கம் அதன் பொருளாதார திறமையின்மை மற்றும் கொள்கை பற்றாக்குறைகளை மறைப்பதற்கு, பொதுமக்களை இவ்விவகாரத்தில் இழுக்கக் கூடாது என்றும் அன்வார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கார் விலையைக் குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் திணறி வரும் அரசாங்கத்தின் இன்றைய நிலை, அந்த அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் நம்பிக்கையின்மைக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் அன்வார் கூறியுள்ளார்.

கடந்த தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் வாக்குகளை வாங்குவதற்கு பில்லியன் கணக்கில் செய்த செலவுகள் தான், தற்போது நிலவி வரும் நிதிப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் என்றும் அன்வார் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்கவும், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கவும் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தலைமை அதிகாரிகள் அடங்கிய புதிய குழு ஒன்றை பிரதமர் நஜிப் நேற்று  நியமித்தார். அத்துடன் தேசிய நிதிப் பற்றாக்குறையை வரும் 2015 ஆம் ஆண்டிற்குள் 3 சதவிகிதமாக குறைப்பதாகவும் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .