Home அரசியல் ம.இ.கா. தொகுதிகளில் கடுமையான போட்டிகள் உருவாகும் சூழ்நிலை!

ம.இ.கா. தொகுதிகளில் கடுமையான போட்டிகள் உருவாகும் சூழ்நிலை!

634
0
SHARE
Ad

micஜூன் 20 திடீரென்று இந்த ஆண்டே கட்சியின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென மத்திய செயலவை முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிருக்குமா என்ற ஆரூடங்கள் ஒருபுறம் தொடங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

ஆனால், இன்னொரு புறத்திலோ, பல ம.இ.கா தொகுதிகளில் தலைமைத்துவப் போராட்டங்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. பல ம.இ.கா தொகுதிகளில் அதன் தலைவர்கள் நீண்ட நாட்களாக பதவி வகிப்பவர்களாக இருக்கின்றனர். இதனால் சில தொகுதிகளில் புதிய அணிகள் தோன்றி நீண்ட காலமாக பதவியில் இருக்கும் தொகுதித் தலைவர்களைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

வேறு சில தொகுதிகளிலோ, மூத்த தலைவர்கள் சிலர் தங்களின் பதவிகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள முன்வந்துள்ளதால், அந்தத் தொகுதிகளில் அடுத்த நிலைகளில் உள்ளவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்கள். குறிப்பாக சிலாங்கூரிலுள்ள சிப்பாங் தொகுதியில் நீண்ட காலமாக தலைவராக இருந்து வரும் முன்னாள் செனட்டர் சி.கிருஷ்ண்னன் உடல் நலம் காரணமாக தொகுதித்  தலைவர் பதவிக்குப் போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

இதனாலும் சில தொகுதிகளில் இரண்டு அணிகள் உருவாகி போட்டிகள் ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

சிலாங்கூரிலுள்ள உலு சிலாங்கூர் தொகுதியின் தலைமைப் பொறுப்பை தேசியத் தலைவராகி விட்ட காரணத்தால் பழனிவேல் விட்டுக் கொடுப்பார் என்ற கருத்தும் நிலவுகின்றது. இதனால் அங்கும் புதிய தலைவராக அடுத்து யார் வருவது என்ற போட்டி உருவாகும் சூழ்நிலையும் இருக்கின்றது.

இன்னும் சில தொகுதிகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து வந்த காரணத்தால், அந்த தொகுதிகளில் அவர்களை எதிர்த்துப் போட்டியிட யாரும் முன்வராத சூழ்நிலை இருந்து வந்தது.

காரணம், அப்படியே போட்டியிட்டாலும், ம.இ.கா தலைமையகத்தின் ஆதரவு கிடைக்காது என்பதால், அந்தந்த தொகுதிகளில் சாமிவேலுவின் ஆதரவு தொகுதித் தலைவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாமல் இருந்து வந்தனர்.

ஆனால், இப்போது பழனிவேலுவின் தலைமைத்துவம் வந்துவிட்டதால், மாறிவிட்ட அரசியல் சூழ்நிலைகளினால், இந்த சாமிவேலு ஆதரவு தொகுதித் தலைவர்களுக்கு எதிர்ப்பாக போட்டி அணிகள் உருவாகி, தலைமைத்துவத்தைக் கைப்பற்ற மும்முரமாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக, இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஆகஸ்ட் மாதத்தில் கிளைத் தேர்தல்கள் முடிந்தவுடன், தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடக்கும் போது பல தொகுதிகளில் கடுமையான போட்டிகள் ஏற்படும் என்பது உறுதியாகத் தெரிகின்றது.