ஜோகூர், ஜூன் 20 – ஜோகூர் மாநில சட்டமன்ற சபாநாயகாராக முன்னாள் ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஜீஸ் இன்று காலை பதவி ஏற்றார். அவருடன் அவரது மனைவி அஜிஸா சகாரியாவும் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றார்.
இருப்பினும் சபாநாயகரான முகமட் அஜீஸ், ஜோகூர் சட்டமன்ற உறுப்பினரான தனது மனைவியிடம் நிலைமையாக நடந்து கொள்வாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
முன்னாள் ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினரான முகமட் அஜீஸ் நாடாளுமன்றத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியவர். நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால் அவரது மனைவி அஜிஸா சகாரியா, பாரிட் ராஜா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இன்று காலை நடந்த பதவி ஏற்பு நிகழ்வில் தனது கணவர் முன் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய முகமட் அஜீஸ்,தேசத் துரோக குற்றத்திற்காக, பெர்சே இயக்கத்தின் இணைத் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசனை தூக்கிலிட வேண்டும் என்று கருத்துக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
இதனால் எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளான முகமட், பின் தன்னுடைய கருத்துக்களை திரும்பப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.