பினாங்கு, ஜூன் 20 – நீண்டகாலமாக மஇகாவின் வழி பல அரிய சமூக சேவைகளை டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் வழங்கி வந்திருப்பதன் அடிப்படையில் தொடர்ந்து அவரின் சேவை கட்சிக்கு தேவை என்ற ஆதங்கம் அனைவரிடமும் இருந்தபோதும், மூன்றாண்டுகள் மட்டும் மஇகாவின் உயர்மட்ட பதவியை அலங்கரிக்கப் போவதாக பழனிவேல் எடுத்திருக்கும் அவரின் முடிவுக்கு அனைவரும் மதிப்பளிப்போம் என்று பினாங்கு மஇகா பாகான் தொகுதித் தலைவர் டத்தோ ஹென்றி பெனடிக் ஆசீர்வாதம் (படம்) கருத்துரைத்துள்ளார்.
அதே வேளையில் மஇகா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும், அடுத்தடுத்தப் பொது தேர்தல்களில் நுறு சதவீதம் வெற்றி வாய்ப்பை குவிக்கவும் அனைத்து மஇகா தலைவர்களும் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்திலும், மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கக்கூடாது என்ற முடிவிலும் அனைவரும் ஒரே கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று டத்தோ ஹென்றி இன்று பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறினார்.
நீண்டதொரு வரலாற்றைக் கொண்ட மஇகாவில், புதிய தலைமுறையினர் அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்ட இக்காலக் கட்டத்தில் ஜி. பழனிவேல் அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறப்பான பணிகளையும் சேவைகளையும் ஆற்றி வருகிறார் என்பதுடன் மஇகாவின் வளர்ச்சியிலும் அக்கறையோடு கவனம் செலுத்தி வருகிறார் என்பது அவரின் சிறந்த தலைமைத்துவத்தை காட்டுகிறது.
போட்டி வேண்டாம்
அதன் அடிப்படையில் ஜி.பழனிவேல் எடுத்திருக்கும் முடிவுக்கு மஇகா உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் சுமுகமான முறையில் போட்டி இன்றி பழனிவேலுவை தேசியத் தலைவராக தேர்தெடுக்க வேண்டும் என்று ஹென்றி கேட்டுக்கொண்டார்.
மஇகாவில் தேசியத் தலைவருக்கு போட்டி வேண்டும், தலைமைத்துவ மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்தை மஇகா தலைவர்கள் கொண்டிருந்தால், மஇகாவின் எதிர்கால நன்மைகளை மனதில் வைத்து கட்சியை பலப்படுத்தும் வகையில் தேசியத் தலைவரை எதிர்க்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து டத்தோ ஹென்றி வலியுறுத்தினார்.
தற்போது உள்ள நிலையில் இந்தியர்கள் மத்தியில் இருக்கும் பிளவுகள் போதும், தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியை ஏற்படுத்தி கட்சியிலும், இந்தியர்கள் மத்தியிலும் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்த வேண்டாம் என்று டத்தோ ஹென்றி பெனடிக் ஆசீர்வாதம் கேட்டுக்கொண்டார்.