சிங்கப்பூர், ஜூன் 21 – இந்தோனேஷியாவில் எரியும் காட்டுத் தீயினால் எழும்பிய கரும்புகை, கடந்த ஒருவாரமாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதுடன், பலரும் மூச்சு திணறல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இன்று காற்றில் மாசு அளவு ( பி.எஸ்.ஐ) 400 புள்ளி வரை உயர்ந்திருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தொடருமானால் சிங்கப்பூரில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்படுவதோடு, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புகை மூட்டம் இயற்கையாக வந்ததா அல்லது வனத்தை அழிக்கும் நோக்கில் உருவான சதிச்செயலா என கண்டுபிடிக்க முடியாமல் நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சிங்கப்பூர் அரசாங்கமும், இந்தோனேசிய அரசாங்கமும் இணைந்து காட்டுத்தீயை தடுப்பது குறித்து அவசரப் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றன.
மேலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கடும் புகையின் காரணமாக 211 பள்ளிகளுக்கும் மேல் மூடப்பட்டுள்ளன. கடும் புகை இன்று 400 பி.எஸ்.ஐ யை தொட்டுவிட்டதால், முடிந்தவரை முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், மற்றவர்கள் முகமூடி அணிந்து கொண்டு வெளியிடங்களுக்கு செல்லுமாறும் சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.