Home நாடு மெர்போக் திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலிக கூடாரம் கட்டி குந்தியிருப்புப் போராட்டம்

மெர்போக் திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலிக கூடாரம் கட்டி குந்தியிருப்புப் போராட்டம்

682
0
SHARE
Ad

Merbok-Tents-rallyகோலாலம்பூர், ஜூன் 23 தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலக வேண்டுமென தலைநகர் மெர்போக் திடலில் மக்கள் கூட்டணி சார்பாக பேரணி நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது சுமார் 40 தற்காலிகக் கூடாரங்கள் கட்டி, அங்கேயே குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் ஏழு பேரும் பதவி விலகும்வரை மெர்போக் திடலை விட்டு விலகப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளனர்.

சோலிடாரிட்டி அனாக் மூடா மலேசியா எனப்படும் அரசாங்கச் சார்பற்ற அமைப்பு இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றது.

மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் தொடர்ந்து பதவியில் இருந்து கொண்டு, இந்த ஆண்டு அரசியல் சட்ட அமைப்பின்படி நடத்தப்பட வேண்டிய தேர்தல் எல்லை மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று இரவு அவர்களுடன் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவும் மெர்போக் திடலிலேயே தங்கியதாகவும் தகவல்கள் கூறின.

இதற்கிடையில், மெர்போக் திடலில் உள்ள கழிவறைகள் கோலாலம்பூர் மாநகரசபையால் பூட்டப்பட்டுள்ளன. இதனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கேயே கூடாரம் அடித்து தங்கியிருக்க முடியும் என்பது கேள்விக் குறிதான்.

ஆனால், ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.

நாளை, திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடவிருக்கும் நிலையில், நாடாளுமன்றம் முன்பாகவும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலக வேண்டுமெனக் கோரி போராட்டம் நடத்துவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அதற்கு முன்பாகவே காவல் துறையினர் தலையிட்டு கூடாரங்களைக் கலைத்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றலாம் என்றும் கூறப்படுகின்றது.