Home நாடு “இன்றைய 15வது 505 கறுப்புப் பேரணி: தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலக வேண்டும்!” –...

“இன்றைய 15வது 505 கறுப்புப் பேரணி: தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலக வேண்டும்!” – அன்வார் அறிக்கை.

389
0
SHARE
Ad

Anwar Ibrahimகோலாலம்பூர், ஜூன் 22 – “எங்களின் 15வது 505 கறுப்புப் பேரணி போராட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்களின் எதிர்ப்பை உணர்ந்து தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து பதவி விலக வேண்டும்” என மக்கள் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று நடைபெறும் 505 கறுப்புப் பேரணியை முன்னிட்டு மலேசியாகினி இணைய செய்தித் தளத்திற்கு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் அன்வார் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த கட்டுரையில் அவர் மேலும் எழுதியிருப்பதாவது:-

“மெர்போக் திடலில் எங்களின் பேரணியை நடத்துவதற்கு நாங்கள் எவ்வளவோ தூரம் வளைந்து கொடுத்தாலும், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் துங்கு அட்னானும், அதிகாரத்தில் உள்ள மற்றவர்களும் உத்தரவுகள் கொடுத்து, எங்களை அலைக்கழிப்பதில் மும்முரமாக இருக்கின்றார்கள்.

ஓர் அமைதிப்பேரணி நடத்துவதற்கு எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு அவர்கள் ஒட்டு மொத்தமாக இடையூறுகள் செய்கின்றார்கள்.

அவர்களின் இந்த ஆணவ அதிகாரம், அவர்கள் தங்களின் அதிகார சக்தியை முழுமையாக தவறாகப் பயன்படுத்துவதால்தான் சாத்தியமாகின்றது.

அவர்கள் பெரும்பான்மை மக்களின் ஆதரவினால் பதவிக்கு வரவில்லை. மாறாக, காலங் காலமாக இருந்து வரும் பொதுத் தேர்தல் நடைமுறைகளைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, திட்டமிடப்பட்ட முறைகேடுகளை அரங்கேற்றி அதன்மூலம் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றார்கள்.

இருப்பினும் நாங்கள் இந்த விவகாரத்தில் தீவிரமாக இதுவரை நடந்து கொள்ளவில்லை என்பதோடு அமைதியாகவும் இந்த பிரச்சனையை அணுகி வருகின்றோம்.

மக்கள் இதுவரை மிகுந்த பொறுமையைக் கையாண்டு வருகின்றார்கள். வீதிப் போராட்டத்திற்கு செல்லாமல், அமைதிப் பேரணிகள் மூலமாகவும் தங்களின் ஆத்திரத்தையும், எதிர்ப்பையும், அதிருப்தியையும், மக்கள் வெளிக் காட்டி வருகின்றார்கள்.

தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலக வேண்டும்

போராடும் இந்த மக்களுக்கு தேவை என்னவென்றால் நீதியும் நியாயமும்தான்.

தேர்தல் ஆணையத்தின் தலைவரும், துணைத் தலைவரும் பதவி விலக வேண்டும். பொதுத் தேர்தல் நடைமுறைகள் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இது என்ன அளவுக்கு அதிகமான வரைமீறிய கோரிக்கைகளா?

ஆங்கிலக் கவிஞர் டி.எஸ்.எலியட் இந்த மாதிரி தருணங்களில் “ராஜினாமா செய்! ராஜினாமா செய்!” என்று எழுதியிருக்கின்றார்.

எங்களின் பொதுத் தேர்தல் வெற்றியை நீதிக்குப் புறம்பான முறையில் எங்களிடம் இருந்து பறித்துவிட்ட அம்னோ-தேசிய முன்னணி அரசாங்கம் ஒரு நீண்ட பட்டியலைக் கொண்ட தவறுகளையும் செய்திருக்கின்றது.

பேரணியில் போராடும் எந்த தவறும் செய்யாத போராட்டவாதிகளை கைது செய்வது, சமூகப் போராளிகள் மீது நீதிமன்ற வழக்குகளைச் சுமத்துவது, அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்ற வழக்குகளை சுமத்துவது, அவர்களின் அனைத்துலக கடப்பிதழை முடக்குவோம் என மிரட்டுவது – இப்படியாக இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

அதே வேளையில் இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை தூண்டிவிடுவது, அச்ச உணர்வை மக்களிடையே விதைப்பது போன்ற அணுகுமுறைகள் சுதந்திரமாக கையாளப்படுகின்றன.

இந்தக் குற்றத்தை ஒரு முன்னாள் பிரதமரும், ஒரு முன்னாள் நீதிபதியும் எந்தவித தயக்கமும் இல்லாமல் சுதந்திரமாக, முன்னின்று செய்து வருகின்றனர். அவர்களுக்கு அம்னோ பின்னணியில் இயங்கும் தகவல் ஊடகங்கள் ஊக்கமும் உதவிகளும் தருகின்றன.

நாங்கள்தான் தேர்தலில் வெற்றி பெற்றோம்.

நாங்கள் 13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றோம். ஆனால், தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி அம்னோ எங்களின் வெற்றியைப் பறித்துவிட்டது. அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.

மக்களின் உரிமைகளை அவர்கள் துஷ்பிரயோகம் செய்துவிட்டார்கள். இப்போதோ, காவல் துறையினரைப் பயன்படுத்தி, அவர்களுக்கு உத்தரவிட்டு, இன்றைய பேரணியை நாங்கள் தொடர்ந்து நடத்தினால் எங்கள் மீது சட்டம் பாயும், வழக்குகள் தொடுக்கப்படும் என்ற அடிப்படையற்ற அச்சுறுத்தல்கள் ஏவப்படுகின்றன.

இவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் நினைவுறுத்த விரும்புகின்றேன்.

இந்த பயமுறுத்தல்களுக்கெல்லாம் யாரும் பயப்படாதீர்கள். இந்த அச்சுறுத்தல்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.

அமைதியான முறையில் ஒன்று கூடுவது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை. உங்களின் வாழ்வுரிமை, காவல் துறையாலும், அம்னோவாலும் அல்லது நாட்டின் பிரதமராலும் நிர்ணயிக்கப்படமுடியாது. கட்டுப்படுத்த முடியாது.

இன்று நடைபெறும் 505 கறுப்புப் பேரணி நமது 15வது பேரணியாகும். தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாளர்கள், நாடு முழுமையிலும் நிகழ்ந்த முறைகேடுகளுக்காக பதவி விலக வேண்டும் என்பதற்காக கோரிக்கை விடுப்பது உங்களின் உரிமை!

“அழிந்த மை” மன்னிக்க முடியாத குற்றம்

அழியாத மை என்று கூறப்பட்ட மை அழிந்தது என்ற ஒன்றே மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் இன்றைய பேரணி நமது நாட்டின் சரித்திரத்தில் அழிக்க முடியாத முத்திரையைப் பதிவு செய்யும்.

உங்களது பிள்ளைகளும், எனது பிள்ளைகளும், நமது எதிர்கால சந்ததியினரும் இந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற பேரணியை என்றைக்கும் நினைவில் வைத்திருப்பர்.

நமக்கு ஏற்பட்ட இன்னல்கள், இடையூறுகள், தடைகள், நம்மைக் கவிழ்க்கப் பார்க்கும் பதுங்கு குழிகள் இவற்றையெல்லாம் தாண்டி நாம் நமது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றோம் என்பதை அவர்கள் எப்போதும் தங்களின் நினைவுகளில் பதிவு செய்து வைத்திருப்பார்கள்.

நாட்டைச் சூழ்ந்துள்ள புயலின் நடுவே, அமைதியை விரும்பும் எல்லா இனங்களைச் சேர்ந்த மலேசியர்களும், ஒருவரோடொருவர் –  மூத்தவர் இளையவர் என்ற பேதமின்றி கைகோர்த்துக் கொண்டு நடந்தோம் என்பதையும் நியாயம், நீதி, நமது உரிமை இவற்றுக்காக ஒன்றுபட்டு போராடினோம் என்பதையும் நமது எதிர்கால சந்ததியினர் நினைவுகளில் வைத்திருப்பர்.

சட்டவிரோதமான முறையில் அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் கூடிய விரைவிலோ, எதிர்காலத்திலோ மக்கள் சக்தியால் நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள் என்பதை சரித்திரம் நமக்கு எப்போதும் காட்டியுள்ளது. இந்த மக்களின் சக்தியானது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நமக்கு வழங்கப்பட்ட – யாராலும் நம்மிடமிருந்து பிரித்தெடுக்க முடியாத உரிமைகளாகும்.

சட்டங்களின் அடிப்படையில் ஆளப்படும் ஒரு நாட்டின் அடிப்படையே மக்களின்  இந்த உரிமைகள்தான். இவற்றை யாராலும் நம்மிடமிருந்து பறித்துக் கொள்ள முடியாது.

அம்னோ-தேசிய முன்னணி அரசாங்கம் உங்களின் முதலாளியல்ல என்பதோடு, அவர்கள் உங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

கடவுளின் கிருபையால் இந்த நாட்டின் எதிர்காலம் உங்களின் கரங்களில்தான் இருக்கின்றது. காலம் கனியும் போது நாம் எதிர்பார்க்கும் நமது எதிர்காலம் நம்மை வந்து சேர்ந்தடையும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்”

–    இவ்வாறு பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இப்ராகிம் அந்த சிறப்புக் கட்டுரையில் கூறியிருக்கின்றார்.