புத்ரா ஜெயா, ஜூன் 26 – இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீக்கு, சுமத்ராவில் இருக்கும் மலேசிய தோட்ட நிறுவனங்கள் தான் காரணமாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய அரசாங்கம், இந்தோனேசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும்.
காரணம் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க மலேசிய அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடையாது என்று மலேசிய இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் பால்தாசர் கம்புயாவுடன் கலந்தாலோசிக்க பழனிவேல் இன்று ஜகார்தா செல்கிறார்.
சட்டத்திற்கு விரோதமாக இந்தோனேசியாவில் தீ வைப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மலேசிய தோட்டப்புற நிறுவனங்களின் தலைவர்களுடன், தனது அமைச்சகம் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் பழனிவேல் தெரிவித்தார்.
“அவர்கள் மீது இந்தோனேசிய அரசாங்கம் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இப்போதைக்கு காட்டுத்தீயை அணைப்பது தான் மிக முக்கியம்.காட்டுத்தீயை அணைக்கத் தேவையான கருவிகளையும்,மனித வளங்களையும், தொழில்நுட்ப உதவிகளையும் மலேசிய அரசாங்கம் செய்வதற்குத் தயாராக உள்ளது. காரணம் புகைமூட்டம் தற்போது தேசிய விவகாரமாக உருவெடுத்துள்ளது” என்றும் பழனிவேல் கூறியுள்ளார்.
மேலும் போர்னியோ உள்ளிட்ட பல இடங்களில் இப்போது புகைமூட்டம் மறைந்துள்ளது. மேலும் புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும் என்று நேற்று செய்தியாளர்களிடம் பழனிவேல் தெரிவித்தார்.