2009ஆம் ஆண்டில் நடைபெற்ற ம.இ.கா தேர்தல்களில் டாக்டர் சுப்ரமணியம், டத்தோ சரவணன், டத்தோ தேவமணி ஆகிய மூவரும் உதவித் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன் பின்னர், கட்சியில் நடைபெற்ற தலைமைத்துவ மாற்றங்களில் டாக்டர் சுப்ரமணியம் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். டத்தோ சரவணன், தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பேராக் மாநிலத்தின் சட்டமன்ற அவைத் தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவமணி மீண்டும் உதவித் தலைவர் பதவிக்கு உறுதியாகப் போட்டியிடுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவரைத் தொடர்ந்து, சாமிவேலுவின் புதல்வரும், நடப்பு மத்திய செயலவை உறுப்பினருமான வேள்பாரி, தேசிய இளைஞர் பகுதித் தலைவராகப் பதவி விலகிச் செல்லும் டி.மோகன், புதிய துணையமைச்சர் கமலநாதன், முன்னாள் உதவித் தலைவரும், துணையமைச்சருமான சோதிநாதன் ஆகியோரும் தேசிய உதவித் தலைவர் பதவிகளுக்கு குறி வைத்துள்ளனர்.
இவர்களைத் தவிர முன்னாள் தலைமைச் செயலாளர் முருகேசனும் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்.
முன்பு வட இந்தியர்களைப் பிரதிநிதித்து டான்ஸ்ரீ நிஜார் தேசிய உதவித் தலைவராக இருந்து வந்தார். அந்த இடத்தை நிரப்பும் வகையில், தற்போது கட்சியின் பொருளாளராக இருக்கும் டத்தோ ஜஸ்பால் சிங் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடலாமா என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருவதாகவும் ம.இ.கா. வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆக மொத்தம், ஏறத்தாழ 10 பேர் இம்முறை 3 தேசிய உதவித் தலைவர் பதவிகளுக்கு குறி வைத்திருப்பதால், போட்டிகள் கடுமையாக இருக்கும் என்றும் பிரச்சாரங்கள் தீவிரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.