கோலாலம்பூர், ஜூலை 1 – இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் வீட்டில், நேற்று முன் தினம் புகுந்த 3 கொள்ளையர்கள், 24 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் புக்கிட் டாமன்சாராவில் உள்ள கைரியின் வீட்டில்,கடந்த சனிக்கிழமையன்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. கைரியின் தாயாருக்குச் சொந்தமான அந்த வீட்டில் கைரியும், அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.
சம்பவம் நிகழ்ந்த போது அவர்கள் மூவரும் வீட்டில் இல்லை. அச்சமயம் பணிப்பெண் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த விலை மதிப்புள்ள கடிகாரங்கள், மடிக்கணினி மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இக்கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கோலாலம்பூர் மாநகர காவல்துறைத் தலைவர் கூ சின் வா தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கொள்ளை சம்பவம் பற்றி கைரி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நல்லவேளையாக இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு கெடுதலும் நேரவில்லை. நான் இவ்விவகாரத்தை காவல்துறையின் கையில் ஒப்படைத்துவிட்டேன். அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் நாட்டில் திருட்டு சம்பவங்கள் முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் தங்களையும், தங்களது உடமைகளையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளும் படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.