Home நாடு “ஏர் ஆசியா எக்ஸ் தலைமை அதிகாரி அஸ்ரான் இந்த நாட்டை விட்டு வேறு எங்காவது போகட்டும்”...

“ஏர் ஆசியா எக்ஸ் தலைமை அதிகாரி அஸ்ரான் இந்த நாட்டை விட்டு வேறு எங்காவது போகட்டும்” – பங் மொக்தார் சாடல்

694
0
SHARE
Ad

Bung-Mokhtar-Featureகோலாலம்பூர், ஜூலை 2 – உத்துசான் மலேசியா மலாய்ப் பத்திரிக்கையை ஓர் இனத் துவேஷ பத்திரிக்கை என வர்ணித்துள்ள ஏர் ஆசியா எக்ஸ் (Air Asia X) நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி அஸ்ரான் ஓஸ்மான் ரானியை கினபாத்தாங்கான் (சபா) நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ பங் மொக்தார் ராடின் (படம்) வன்மையாகக் கண்டித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஒரு முரட்டுத் தனமான மலாய்க்காரரைப் போல் நடந்து கொண்டுள்ள அஸ்ரான் இந்த நாட்டின் குடிமகனாக இருக்கத் தகுதியற்றவர், எனவே அவர் வேறு நாடு பார்த்துக் கொண்டு போகலாம் என அஸ்ரானை பங் மொக்தார் கடுமையாகச் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில், மாமன்னரின் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போது, பங் மொக்தார் இவ்வாறு கூறினார். ஏற்கனவே பலமுறை சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கிளப்பியுள்ளவர் பங் மொக்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா குறுக்கிட்டு பங் மொக்தாரிடம், சாதாரண பொதுமக்களையும் அரசாங்க அதிகாரிகளையும் நாடாளுமன்ற உரைகளில் இஷ்டம் போல் விமர்சிக்கக் கூடாது காரணம் இந்த இடத்தில் அவர்கள் இல்லை என்பதோடு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு  இல்லை என்று கூறினார்.

13வது பொதுத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, உத்துசான் மலேசியா பத்திரிக்கையில் “சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?” என்று தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்ட கட்டுரையைக் குறிப்பிட்டு, தனது ட்விட்டர் செய்தியில் “அந்த மலாய்ப் பத்திரிக்கை இனத் துவேஷத்தை விதைக்கின்றது” என அஸ்ரான் தெரிவித்திருந்தார்.