ஜூலை 3 – மெட்ரிகுலேஷன்ஸ் படிப்பிற்காக 1,850 இந்திய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள துணைக் கல்வி அமைச்சர் ப.கமலநாதன், ஆனால் அந்த பெயர்ப் பட்டியலை வெளியிட முடியாது எனக் கூறியிருப்பது இந்திய சமுதாயத்தில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எந்தப் பல்கலைக் கழகமாக இருந்தாலும், பள்ளியாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான்.
ஒருபுறம், சமூகப் போராளி ஆ.திருவேங்கடம் தலைமையில் மெட்ரிகுலேஷன்ஸ் படிப்பிற்கு இடம் கிடைக்காத பிள்ளைகளின் பெற்றோர்கள் ஆட்சேபக் கூட்டங்கள் நடத்தி வருகின்றார்கள். இந்நிலையில் உண்மையிலேயே 1,850 மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் அதைக் காட்டுவதில் இன்னும் ஏன் தயக்கம்? ஏன் இந்த மூடுமந்திரம்?
குலசேகரனும் நெருக்குதல்
இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து போராடி வரும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெகவைச் சேர்ந்தவருமான எம்.குலசேகரன் (படம்) இந்திய மெட்ரிகுலேஷன்ஸ் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை கல்வி அமைச்சு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பத்திரிக்கைகளில் வெளியிடுவது நடைமுறை இல்லை என்றால் அதனை இனி நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் குலசேகரன் அறைகூவல் விடுத்தார்.
பொதுத் தேர்தல் காலங்களில் தமிழ்ப் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களைப் பணம் கொடுத்துப் போட்ட தேசிய முன்னணி அரசாங்கம் அதே போன்று இந்த மெட்ரிகுலேஷன்ஸ் பட்டியலையும் வெளியிட்டால் அதனால் இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு வரும் என்றும் குலசேகரன் கூறினார்.
மெட்ரிகுலேஷன்ஸ் படிப்பை பல இந்திய மாணவர்கள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கும் காரணம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அனைவருக்கும் இடம் அளித்து விட்டால் எல்லா இந்திய மாணவர்களும் தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பை மறுக்காமல் ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால், படிப்பு தொடங்கி ஏறத்தாழ இரண்டு மாதம் கழித்தே மேல் முறையீடு என்ற பெயரில் இந்த மாணவர்களுக்கு இடம் வழங்கப்படுவதால் பலர், தங்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற அச்சத்திலும், கூடுதல் தேர்ச்சி கிடைக்காது என்ற தயக்கத்திலும் வழங்கப்படும் மெட்ரிகுலேஷன்ஸ் இடங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் குலசேகரன் சுட்டிக் காட்டியுள்ளார்.