கோலாலம்பூர், ஜூலை 3 – குழந்தைகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதற்கு பெற்றோர் இருவருடைய சம்மதமும் வேண்டும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவில், தான் உறுதியாக இருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் கூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெற்றோர் இருவரின் சம்மதம் இருந்தால் மட்டுமே குழந்தைகளை மதம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும் “அரசியலமைப்பு எப்போதும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். குறிப்பாக சமயம் என்று வரும்போது தனித்து நிற்கக் கூடாது” என்றும் நஸ்ரி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்தின் 107 வது பிரிவு சட்டதிருத்தம் 2013 க்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா? அல்லது ஆதரவு தெரிவிப்பாரா? என்பதை நஸ்ரி கூற மறுத்துவிட்டார்.
இந்த சட்டத்திருத்தத்திற்கு தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளான மசீச, மஇகா மற்றும் கெராக்கான் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.