கோலாலம்பூர் – புதிதாக இஸ்லாம் மதத்துக்கு மாறிய பெற்றோரில் ஒருவர் முஸ்லீம் அல்லாத மற்றொரு பெற்றோரின் அனுமதியின்றி, 18 வயதுக்கும் குறைவான குழந்தையை மதமாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் குறித்து மசீசவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று மஇகாவின் சார்பில் அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் இந்த சட்டதிருத்தம் குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கை பின்முதுகில் குத்துவது போன்றது என்றும் மத்திய அரசாங்கம் சாதிக்க நினைக்கும் ஒரு நல்ல காரியத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றும் மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
“திருமண மற்றும் விவகாரத்து சட்டத்தை திருத்தும் மசோதாவை இப்போதுதான் மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றது. இந்த மசோதா 18 வயதுக்கும் குறைவானவர்களை தங்களின் அனுமதியின்றி மதமாற்றம் செய்யப்படும் நடைமுறையிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. இந்நிலையில், இது குறித்து நன்கு தெரிந்திருந்தும், பெர்லிஸ் சட்டமன்றம் இதுபோன்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவது ஏற்றுக் கொள்ள முடியாதது” எனவும் லியோவ் சாடினார்.
“இது பின்னோக்கிச் செல்வதற்கு ஒப்பாகும். மத்திய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பெர்லிஸ் மந்திரி பெசார் என்ன சாதிக்க நினைக்கிறார்?” என்றும் லியோவ் கேள்வி எழுப்பினார்.
இது இஸ்லாம் மதம் குறித்த விவகாரமோ, அரசியலோ அல்ல என்றும் கூறிய லியோவ் “இது பெற்றோர்களில் ஒருவர் இஸ்லாத்துக்கு மதம் மாறாத பட்சத்தில் அவருக்கு வழங்கப்படும் நீதியும் நியாயமும் இணைந்த சட்ட பாதுகாப்பாகும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.