Home நாடு “ஒருதலைப் பட்ச மதமாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வருவோம்…ஆனால்…”

“ஒருதலைப் பட்ச மதமாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வருவோம்…ஆனால்…”

1162
0
SHARE
Ad

najibகோலாலம்பூர் – “சர்ச்சைக்குரிய ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை தடுத்து நிறுத்த திருமணம் மற்றும் மணவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை பரிந்துரைக்கும் 88ஏ சட்டவிதியை அமுல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதனைச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைத் தாருங்கள்” என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மகளிர் அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

“88-ஏ சட்டத் திருத்தத்தை நான் கொண்டுவர விரும்புகிறேன். மேலும் பலவற்றையும் நான் செய்ய விரும்புகிறேன். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தில் எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பது ஒன்று ஆனால் நம்மால் என்ன செய்ய முடியாது என்பது வேறொன்று” என்றும் நஜிப் மேலும் கூறினார்.

நேற்று திங்கட்கிழமை, தேசிய மகளிர் நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டிஎன் 50 எனப்படும் தேசிய உருமாற்றத் திட்டம் 2050 குறித்து சுமார் 1000 மகளிருடன் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் நஜிப் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

சர்ச்சைக்குரிய 88-ஏ சட்டவிதித் திருத்தத்தை நஜிப் அரசாங்கம் மீட்டுக் கொண்டு, திருமணம் மற்றும் மணவிலக்கு சட்டத்தின் மற்ற சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் அண்மையில் நிறைவேற்றியது. 88-ஏ சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டுமென்றால், நாட்டின் அரசியல் சாசனத்தின் சில சட்டங்களையும் முதலில் திருத்த வேண்டும் என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து அந்த 88-ஏ சட்டவிதித் திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படவில்லை.

222 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில் ஆளும் தேசிய முன்னணி தற்போது 134 இடங்களைக் கொண்டுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற தேசிய முன்னணி மேலும் 14 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றாக வேண்டும்.