கோலாலம்பூர், ஜூலை 4 – துணை வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோ ஹம்சா ஸைனுடினுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த 10 மில்லியனுக்கான அவதூறு வழக்கை எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று திரும்பப் பெற்றுக்கொண்டார்.
அன்வாரின் சட்ட ஆலோசனைக் குழு, ஆர். சிவராசா, டத்தோ ஃபிரோஸ் ஹுசைன் அகமட் ஜமாலுடின் மற்றும் ஹம்சா ஆகியோர், இன்று ஒன்றாகச் சேர்ந்து பத்திரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில் ஹம்சாவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இரு தரப்பினரின் சுமூக உடன்படிக்கையின் காரணமாக திரும்பப்பெறப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து சிவராசா கூறுகையில், “இந்த அறிக்கை இரு தரப்பின் ஒப்புதலோடு வெளியிடப்படுகிறது. இரு தரப்பும் இனி இவ்விவகாரத்தை மீண்டும் கொண்டுவர மாட்டோம்” என்று கூறினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அப்போது வீடு மற்றும் உள்ளூர் அரசாங்கப் பிரிவு துணை அமைச்சராக இருந்த ஹம்சா ஸைனுடின் மீது, அன்வார் இப்ராகிம் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
அதில் ‘சைனீஸ் டெய்லி’ என்ற பத்திரிக்கையில், “அன்வார் என் மனைவியை பலாத்காரம் செய்தார்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில், தன்னைப் பற்றி ஹம்சா அவதூறான கருத்துக்களை கூறியிருப்பதாக அன்வார் குறிப்பிட்டிருந்தார்.