Home கலை உலகம் திரை விமர்சனம் – சூர்யாவின் கர்ஜனையில் “சிங்கம் 2”

திரை விமர்சனம் – சூர்யாவின் கர்ஜனையில் “சிங்கம் 2”

1133
0
SHARE
Ad

imagesஜூலை 5 – “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு டா” என்று ஆக்ரோஷமாக சூர்யா பேசும் வசனத்தோடு துவங்குகிறது “சிங்கம் 2”. இதற்கு முன் சூர்யா, ஹரி கூட்டணியில் வெளிவந்த “சிங்கம்” படத்தின் தொடர்ச்சி தான் “சிங்கம் 2” படம்.

“சிங்கம்” படத்தின் முடிவில் தனது வேலையை ராஜினாமா செய்வதாக ஊர் அறிய அறிவித்துவிட்டு, உள்துறை அமைச்சர் விஜயகுமாரின் ரகசிய உத்தரவின் பேரில், தூத்துக்குடியில் நடக்கும் ஆயதக்கடத்தல் சம்பந்தமான குற்றங்களைக் கண்டறியப் புறப்படுகிறார் காவல்துறை அதிகாரி துரைசிங்கம்.

அங்கு நடப்பது ஆயுதக்கடத்தலா அல்லது வேறு ஏதும் சட்டவீரோத செயல்களா என்பதை கண்டறிந்து,இறுதியில் சமூக வீரோதிகளைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்துகிறாரா என்பது தான் “சிங்கம் 2” படத்தின் கதை.

#TamilSchoolmychoice

மிடுக்கான தோற்றம், அனல் வீசும் வசனம், காவல்துறைக்கே உரிய கம்பீரம் போன்றவற்றில் சூர்யாவின் நடிப்பு மீண்டும் ஒருமுறை கர்ஜித்திருக்கிறது. துரைசிங்கம் என்ற காவல்துறை அதிகாரியை மக்கள் மறப்பது கடினம் என்றே தோன்றுகிறது அந்த அளவிற்கு தனது கதாப்பாத்திரத்திலேயே வாழ்ந்திருக்கிறார் சூர்யா.

தனது காதலர் சூர்யாவை பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்யக் காத்திருக்கும் வேடத்தில் கதாநாயகி அனுஷ்கா, படத்தில் அவ்வப்போது வந்து போனாலும் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். இதுதவிர படத்தின் துவக்கத்திலேயே ஒரு பாட்டுக்கு வந்து கவர்ச்சி நடனம் ஆடிவிட்டு செல்கிறார் நடிகை அஞ்சலி. படத்தில் சூர்யாவை ஒருதலையாகக் காதலிக்கும் இன்னொரு கதாநாயகியான ஹன்சிகா படம் முழுக்க வந்தாலும், அனுஷ்காவின் முன் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

“எரிமலை எப்படி பொறுக்கும்” நினைவிருக்கிறதா? ஆம் அதே எரிமலை ஏட்டு விவேக்,  “சிங்கம்2” படத்தில் பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். ஒரு பக்கம் விவேக் செய்யும் காமெடி அட்டகாசம் வயிறு குலுங்க வைக்கிறது என்றால், இன்னொரு பக்கம் சந்தானம் செய்யும் சேட்டைகள் நம்மை கீழேயே விழ வைக்கிறது. அந்த அளவிற்கு சந்தானம் இதில் காமெடியில் கலக்கியிருக்கிறார்.

வழக்கமாக படங்களில் ஒரு வில்லன் தான் இருப்பார்.இப்படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள் நடித்துள்ளனர். ‘சங்கமம்’ ரகுமான் முக்கிய வில்லனாகவும், ஆஜானுபாகுவான ஒரு சிங்கள நடிகரும், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ‘டேனி’ என்ற ஹாலிவுட் நடிகரும் நடித்துள்ளனர். காலத்திற்குத் தகுந்தவாறு இப்போது வரும் படங்களில் வில்லன்களும் பெருகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. இனி கதாநாயகர்களின் பாடு திண்டாட்டம் தான்.

மற்றபடி, படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடம் கூட சோர்வைத் தராமல் அதிவேகமாக நகர்கிறது படத்தின் திரைக்கதை, வசனங்கள், படத்தொகுப்பு மற்றும் காட்சி அமைப்புக்கள். தேவி ஸ்ரீ  பிரசாத்தின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலம் சேர்த்திருக்கிறது. ஆனால் ‘சிங்கம்…சிங்கம்’ பாடலைத் தவிர மற்ற பாடல்களில் “சிங்கம் 2” சீற்றம் சற்று குறைவு தான்.

படத்தின் கதைimages (4)

அரசாங்கத்திற்கே தெரியாமல், உள்துறை அமைச்சரான விஜயகுமாரின் கட்டுப்பாட்டில், தூத்துக்குடி துறைமுகத்தில் நடக்கும் கள்ளக்கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களை கண்டுபிடிக்க, அதே ஊரில் ஒரு பள்ளியில் தேசிய மாணவர் படை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் துரைசிங்கம்.

அந்த ஊரின் மிகப்பெரிய தொழிலதிபரான தங்கராஜ் (ரகுமான்) மற்றும் கள்ளக்கடத்தல் தாதாவான பாய் ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.

இந்நிலையில், பாய் ஆட்களுக்கும், அந்த ஊரைச் சேர்ந்த இன்னொரு கும்பலுக்கும், மதுபானக்கடையில் பிரச்சனை வெடிக்க, பாய் ஆட்கள் அக்கும்பல் தலைவனின் தங்கையைக் கடத்தி விடுகிறார்கள்.இதனால் அங்கு ஜாதிக் கலவரம் வெடிக்கிறது.

ஊரெங்கும் கலவரமாக இருக்க, காவல்துறை அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. அந்த சூழ்நிலையில் கலவரத்தை அடக்க வேறு வழியின்றி, அவசர அவசரமாக தனது வேடத்தைக் கலைத்து டி.எஸ்.பி ஆக மீண்டும் பணியில் சேர்கிறார் துரைசிங்கம்.

காக்கிச் சட்டையைப் போட்டுவிட்டு தனது வீட்டிலிருந்து மோட்டாரில் கிளம்பும் போது அட! அட!அட!. இப்படி ஒரு நேர்மையான, தைரியமான அதிகாரி நிஜத்தில் இருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது. துரைசிங்கம் பதவி ஏற்றவுடன் அந்த ஊரில் உள்ள ரௌடிகளுக்கும், தாதாக்களுக்கும் உள்சிலுவார் கிழியும் அளவிற்கு அடி விழுகிறது.

தொடர்ந்து துரைசிங்கம் எடுக்கும் இந்த அதிரடி வேட்டையில் தான், தங்கராஜும், பாயும் வெளியே எதிர்கள் போல் நடித்துவிட்டு, வெளிநாடுகளிலிருந்து போதைப் பொருளைக் கடத்தி வந்து இந்தியாவில் கூட்டாக வியாபாரம் செய்கிறார்கள் என்று தெரிய வருகிறது. அவர்கள் இருவருக்கும் தேவையான போதைப் பொருளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது உலக மகா கடத்தல்காரனான  ‘டேனி’ என்ற விவரமும் தெரிய வருகிறது.

இவர்கள் மூவரையும் ஒவ்வொருவராகப் பொறி வைத்துப் பிடிக்க  ‘ஆப்ரேஷன் டி’ என்று ஒரு குழுவை அமர்த்தி, பல சாமர்த்தியங்களைக் கையாளுகிறார் துரைசிங்கம். அதற்கு தொழிலதிபர் தங்கராஜின் அண்ணன் மகளும், தன்னை ஒருதலைப் பட்சமாகக் காதலிக்கும் பள்ளி மாணவியான ஹன்சிகாவைப் பயன்படுத்திக் கொள்கிறார். இறுதியில், உலக மகா கடத்தல்காரனான டேனியைப் பிடித்தாரா?இல்லையா?, ஆபரேசன் ‘டி’ வெற்றி அடைந்ததா? ஹன்சிகாவின் காதலுக்கு என்ன பதில் சொன்னார்? என்பது தான் படத்தில் சுவாரஸ்யம்.

images (3)படத்திற்கு பக்கபலம்

படத்திற்கு பக்கபலம் என்றால் அது சூர்யாவின் நடிப்பும், விறு விறு திரைக்கதையும் தான். ‘காக்க காக்க’ படத்தில் நடித்த சென்னை காவல்துறை அதிகாரி அன்புச்செல்வனுக்கும், இப்படத்தில் நடித்த துரைசிங்கத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆனால் அதே தோரணை, மிடுக்கு, கச்சிதமான உடற்கட்டு ஆகியவை ‘சிங்கம் 3’ ஐ எதிர்பார்க்க வைக்கிறது.

‘ஆப்ரேஷன் டி’ என்ற குழுவுக்கு உள்துறை அமைச்சரிடம் சூர்யா கேட்கும் அதிகாரங்கள் கைதட்ட வைக்கின்றன. ஒரு குற்றவாளியை கைது செய்தவுடன், அவனை விடுவிக்கும் முயற்சியில் அங்குள்ள உள்ளூர் எம்.எல்.ஏ வில் இருந்து மந்திரி வரை எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வருவது தமிழக அரசியலை அப்பட்டமாகக் காட்டுகிறது.

அதிரடியாக நகரும் கதையில் அவ்வப்போது சந்தானம், விவேக் மற்றும் முன்னாள் வில்லன் மன்சூர் அலிகான் ஆகியோர் ரசிகர்களைக் கிச்சு கிச்சு மூட்டிச் செல்கின்றனர். படத்தில் அத்தனை ரவுடிகளும், தாதாக்களும் இருந்தும் முகம் சுளிக்கும் படியோ அல்லது கண்ணை மூடிக்கொள்ளும் படியோ கொடூரமான கொலைக் காட்சிகள் இல்லை.

முக்கியமாக சண்டைக்காட்சிகளில் சூர்யா ஒரே ஆளாக 10 பேரை அடித்தாலும் கூட அவரது முரட்டுத்தனமான கதாப்பாத்திரத்திற்கு அது ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. நல்லவேளையாக கண்ணால் பார்த்தவுடன் துப்பாக்கி குண்டு திரும்பிச் செல்வது, துப்பாக்கியை கடித்து மென்று துப்புவது போன்ற நம்பமுடியாத காட்சிகள் இப்படத்தில் இடம்பெறவில்லை.

மற்றபடி, சூர்யாவின் அம்மாக நடித்திருக்கும் மூத்த நடிகை சுமித்ரா, அப்பாவாக நடித்திருக்கும் ராதாரவி, அனுஷ்காவின் அப்பா நாசர், அம்மா (‘கில்லி’ படத்தில் விஜயின் அம்மா) ஆகியோர் அவ்வப்போது கதைக்கு கலகலப்பு சேர்க்கின்றனர்.

படத்தின் பலவீனம்images (5)

படத்தின் பலவீனம் என்றால், நாடறிந்த ஒரு காவல்துறை அதிகாரியான துரைசிங்கம் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, அதே ஊரில் ஒரு பள்ளியில் வேலை செய்கிறார். ஆனால் அவர் மீது கடுகளவும் சந்தேகம் வராத மாங்கா மடையர்களாக வில்லன்கள் இருக்கிறார்கள்.

இத்தனைக்கும் படத்தின் துவக்கத்தில், அவர்கள் செய்யும் கடத்தலை பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது, வில்லன்களிடம் மாட்டிக்கொண்டாலும் ஒரு கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொண்டு தப்பி விடுகிறார் சூர்யா.

பாய் ஆட்களில் உள்ள முக்கியமான ஒருவன் இரு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களைக் படகில் அழைத்து வருகிறான். இத்தனைக்கும் அவன் உலக மகா கடத்தல்காரனான டேனியை தான் அழைத்துவர செல்கிறான் என்ற தகவலும் துரைசிங்கத்திற்கு தெரியும். இவ்வளவும் தெரிந்த துரைசிங்கத்திற்கு அந்த இரு ஆப்பிரிக்கர்களில் ஒருவன் தான் டேனி என்ற விவரம் கூடவா தெரியவில்லை.

அவனது பாஸ்போர்ட் எண்ணை வைத்து இணையத்தில் தேடிய பிறகு தான் கண்டுபிடிக்க முடிகிறது. இதை முன்பே செய்திருந்தால் அந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவனை பார்த்த போதே கண்டுபிடித்திருக்கலாமே? (ஹரி அவர்களே கதையில் கொஞ்சம் கவனம் தேவை)

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளை, ஒரு கும்பல் காவல்நிலையத்திலேயே புகுந்து அங்குள்ளவர்களையெல்லாம் வெட்டிவிட்டு, அவர்களை தப்பிக்க வைத்து விடுகிறது. துப்பாக்கி வைத்திருக்கும் காவல்துறையால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

இத்தனை பரபரப்புக்கு இடையே சூர்யாவிற்கு, காதலி அனுஷ்காவிற்கும், ஹன்சிகாவிற்கும் இடையே ஏற்படும் சக்காளத்தி சண்டையை சமாதானப்படுத்துவதற்கு நேரம் இருப்பது தான் ஆச்சர்யமான விஷயம்.

மற்றபடி, 2 1/2 மணி நேரம் ஓடும் இந்த சிங்கத்தை, அதிரடி, நகைச்சுவை, காதல், கவர்ச்சி, சுவாரஸ்யம் என்று அத்தனையும் கலந்த ஒரு கலவையை ரசிகர்களுக்கு இறையாக்கி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.

“சிங்கம் 2 ” – சூர்யாவின் இரண்டாவது கர்ஜனை ..

– பீனிக்ஸ்தாசன்

இந்த படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணையத் தொடர்பின் வழி காணலாம்.

please install flash