Home நாடு மெட்ரிகுலேஷன்ஸ் விவகாரத்தில் விளங்காத குழப்பங்கள்! வெளிவராத மர்மங்கள்!

மெட்ரிகுலேஷன்ஸ் விவகாரத்தில் விளங்காத குழப்பங்கள்! வெளிவராத மர்மங்கள்!

741
0
SHARE
Ad

Kamalanathanஜூலை 6 – மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்களும், மாற்று கருத்துக்களும், மறுப்பறிக்கைகளும் இந்திய மக்களை வெகுவாகக் குழப்பி வருகின்றன.

#TamilSchoolmychoice

நாடு முழுமையிலும் ஏறத்தாழ 28,000 இடங்கள் மெட்ரிகுலேஷன்ஸ் படிப்புக்காக ஒதுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

இத்தனை இடங்களில் இந்தியர்களுக்கு மட்டும் ஏன் மெட்ரிகுலேஷன் இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை என இந்திய சமுதாயம் நீண்ட நாளாக நடத்திய போராட்டங்களின் பலனாக 2011ஆம் ஆண்டு 1,500 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்தது.

உடனடியாக நாடு முழுமையிலும் தேசிய முன்னணி அரசுக்கு பாராட்டு மழைகள் குவியத் தொடங்கின.

ஆனால், 2012ஆம் ஆண்டு சுமார் 900 இந்திய மாணவர்களுக்கு மட்டும் மெட்ரிகுலேஷன்ஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இடங்கள் குறைந்ததற்கு முறையான காரணமும் கூறப்படவில்லை.

2013ஆம் ஆண்டு ஏறத்தாழ 6,185 இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன்ஸ் இடங்களுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், மெட்ரிகுலேஷன் இலாகாவின் புள்ளவிவரம்  892 இடங்கள் மட்டுமே மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கூறுகின்றது.

எனவே, 1500 இடங்கள் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே ஒரு கண்துடைப்புதானா என்பதுதான் இப்போது இந்திய சமுதாயத்தில் எழுந்துள்ள கேள்வி!

குறைந்த இடங்களை இந்தியர்களுக்கு ஒதுக்கிவிட்டு பின்னர் மேல்முறையீடு என்ற பெயரில் அவர்களுக்கு மீண்டும் இடங்கள் ஒதுக்கப்படும் போது பலர் காலம் கடந்து விடுவதால் அந்த இடங்களை ஏற்பதில்லை.

தங்களுக்கு ஏற்படும் அவநம்பிக்கையால், மெட்ரிகுலேஷன்ஸ் இடம் தங்களுக்கு கிடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் வேறு படிப்புகளுக்கு, வேறு கல்லூரிகளில் தங்களைப் பதிந்து கொண்டு விடுகின்றனர்.

ஆனால் 10ஏ மாணவர்களுக்கு இடமில்லை!

இதில் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் 10 ஏ எடுத்த மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன்ஸ் இடம் கிடைக்காமல் போனதுதான்.

எனவே, எந்த அடிப்படையில் மெட்ரிகுலேஷன்ஸ் இடங்களுக்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது.

இதற்கிடையில் இந்த ஆண்டு இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த ம.இ.கா சார்பிலான கல்வி துணை அமைச்சரும், ம.இ.கா கல்விக் குழுத் தலைவரும், ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான, பி.கமலநாதன் மெட்ரிகுலேஷன்ஸ் இடம் கிடைத்த மாணவர்களின் பட்டியலைக் காட்ட முடியும் ஆனால் பிரசுரிக்க முடியாது என மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஓர் அறிவிப்பைச் செய்தார்.

1,850 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் 892 மாணவர்கள் மட்டுமே அந்த இடங்களை ஏற்றுக்கொண்டதாகவும் கமலநாதன் கூறியிருந்தார்.

Thiruvengadam-Sliderஇரண்டு நாட்கள் கழித்து ஜூன் 26ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த துணைப் பிரதமர் மொய்தீன் யாசின், 1800 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அதில் அரசாங்கம் உறுதியளித்தபடி 1,500 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட அமைச்சரவை முடிவு செய்ததாகவும் கூறியிருந்தார்.

எனவே, இப்போது மக்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ள கேள்வி, கல்வி அமைச்சர் கூறுவது உண்மையா அல்லது கல்வி துணை அமைச்சர் கூறுவது உண்மையா என்பதுதான்!

இது ஒரு புறம் இருக்க, ஏறத்தாழ 50 பெற்றோர்கள் சமூகப் போராளி திருவேங்கடம் (படம்) தலைமையில் தகுதி வாய்ந்த தங்களின் பிள்ளைகளுக்கு மெட்ரிகுலேஷன்ஸ் இடம் கிடைக்கவில்லை என ஆத்திரத்துடன் பிரதமர் அலுவலகம் முன்பாகவும், பத்திரிக்கைகளின் வாயிலாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது மறுபரிசீலனை

தகுதி வாய்ந்த மாணவர்கள் பலர் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாகவும் இந்த போராட்டக் குழுவினர் கூறி வருகின்றனர். நிராகரிக்கப்பட்ட 333 விண்ணப்பங்களை தாங்கள் மீண்டும் பரிசீலித்து வருவதாகவும் கல்வி அமைச்சின் மெட்ரிகுலேஷன்ஸ் இலாகாவின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால், கல்வி அமைச்சு மறுபரிசீலனை செய்து இவர்களை மீண்டும் சேர்த்துக் கொண்டாலும் அதற்குள் ஏறத்தாழ 3 மாதங்கள் கடந்து விடும் என்பதால் அவ்வாறு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் மாணவர்கள் படிப்பில் பின்தங்கிவிடக் கூடிய நிலைமைதான் ஏற்படும். இதனாலேயே பலர் தங்களுக்கு வழங்கப்படும் மறுவாய்ப்புக்களை மறுத்துவிடுகின்றனர்.

எனவே, எழுந்துள்ள இந்த கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் கூடிய விரைவில் அரசாங்கமும் கல்வி அமைச்சும் பதில் அளிக்குமா அல்லது மூடப்பட்ட அல்லது மூடி மறைக்கப்பட்ட மற்ற பல விவகாரங்களுக்கு நேர்ந்த கதிதான் இந்த மெட்ரிகுலேஷன்ஸ் விவகாரத்துக்கும் நேருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!