Home வணிகம்/தொழில் நுட்பம் ஊழியர் சேமநிதி வாரியம், குய்ல் சிட்டி மால் பேரங்காடி வாங்குவது குறித்து பலமுனைகளிலும் கேள்விக் கணைகள்!

ஊழியர் சேமநிதி வாரியம், குய்ல் சிட்டி மால் பேரங்காடி வாங்குவது குறித்து பலமுனைகளிலும் கேள்விக் கணைகள்!

784
0
SHARE
Ad

Quill-City-Mall-Featureஜூலை 7 நாட்டின் மிகப் பெரிய நில மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான குய்ல் (Quill) நிறுவனம், தலைநகர் மையத்தில் சுல்தான் இஸ்மாயில் சாலையில் மேம்படுத்தவுள்ள குய்ல் சிட்டி மால் பேரங்காடியை வாங்குவதற்கு ஊழியர் சேமநிதி வாரியம் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விற்பனையின் மதிப்பு 1200 மில்லியன் ரிங்கிட்டாகும். இவ்வளவு தொகை கொடுத்து வாங்கப்படும் நில சொத்து உண்மையிலேயே ஊழியர் சேமநிதி வாரியத்திற்கு மதிப்புள்ள சொத்தாக மாறுமா, இதனால் சேமநிதி வாரிய சந்தாதாரர்களுக்கு பயன்கள் ஏதும் உள்ளதா என்ற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன.

அல்லது குய்ல் நிறுவனம் இந்த சொத்தை சேமநிதி வாரியத்தின் தலையில் கட்டிவிட்டு ரொக்கமாகக் கிடைக்கப்போகும் பெரிய தொகையை எடுத்துக் கொண்டு பயன்பெற்று ஒதுங்கிக் கொள்ளப் போகின்றதா என்ற சந்தேகத்தையும் இந்த விவகாரம் குறித்து எழுதியுள்ள பொருளாதார ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளனர்.

ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் குய்ல் சிட்டி மால் திட்டம் உயர் ரக அடுக்கு மாடி அலுவலகங்களையும், குடியிருப்புக்களையும், பேரங்காடி ஒன்றையும் கொண்டிருக்கும். உண்மையிலேயே இது மதிப்பு மிகுந்த சொத்துதான் என்றாலும் இந்த ஒப்பந்தம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதன் சுற்று வட்டாரத்தில் பல பேரங்காடிகள் இருப்பதால் அவர்களையெல்லாம் மீறி, புதிய வாடிக்கையாளர்களை இந்த குய்ல் பேரங்காடி பெற முடியுமா என்ற சந்தேகத்தையும் ஒரு சிலர் எழுப்பியுள்ளனர்.

காரணம், அருகிலுள்ள மற்றொரு பேரங்காடியான மாஜூ ஜங்ஷன் மால் முழுமையான அளவில் வர்த்தகர்களை ஈர்க்க முடியாமல் திணறி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர் சேமநிதி வாரியத்தின் சேமிப்பு தற்போது 536.55 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கின்றது. உலகிலேயே 6வது மிகப் பெரிய சேமநிதி வாரியம் நமது நாட்டின் வாரியம்தான்.

இதில் 15.05 பில்லியன் அசையா நில சொத்துக்களாக உள்ளன. அதிலும் இவற்றில் 7 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் இலண்டனில் மட்டும் உள்ளன.

எஞ்சிய சேமிப்புகள் நிறுவனப் பங்குகளாகவும், நிதிப் பத்திரங்களாகவும், வைப்புத் தொகைகளாகவும் சேமிக்கப்பட்டுள்ளன.