பாட்னா, ஜூலை 7- பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, தனக்கு எதிராக விமர்சனம் செய்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார்.
அதற்கு முன்னோட்டமாக, பீகார் மாநிலத்தில் உள்ள பா.ஜனதா நிர்வாகிகளிடம் டெலிகான்பரன்ஸ் வசதி மூலம் இன்று உரையாற்றினார்.
அவர் பேசுவதற்கு தேர்வு செய்த 1500 நிர்வாகிகள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் தலா 5 தலைவர்களிடம் மோடி இன்று பேசினார்.
அப்போது மோடி கூறுகையில், ‘1974-ம் ஆண்டு இருந்ததைப் போல இப்போது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை வியாபித்துள்ளது.
பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். மக்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும்’ என்றார். நிதிஷ் குமார் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் இவ்வாறு மறைமுகமாக தாக்கினார்.
அதன்பின்னர் மோடியுடன் பேசிய மாநில பா.ஜனதா தலைவர் மங்கள் பாண்டே, ‘நீங்கள் பிரதமர் ஆக வாய்ப்பு உள்ளது என்று ஒவ்வொருவரும் பேசினார்கள்’ என்று தெரிவித்தார்.
இதனைக் கேட்டு சிரித்த மோடி, ‘இப்போது, நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்திருப்பது முக்கியமான விவகாரம்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக பா.ஜனதா தொண்டர்கள் போராட வேண்டும்’ என்று ஆலோசனை வழங்கினார்.