இஸ்லாமாபாத், ஜூலை 9- அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் 2002ம் ஆண்டில் இருந்தே பாகிஸ்தானில் வசித்து வந்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவன் எவ்வளவு காலமாக பாகிஸ்தானில் தங்கி இருந்தான்? என்பது தொடர்பாக விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு அபோட்டாபாத் ஆணையம் என்ற பெயரில் ஓர் விசாரணை ஆணையம் அமைத்தது.
அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கையை பாகிஸ்தானின் பிரபல நாளிதழான ‘டான்’ நேற்று வெளியிட்டுள்ளது.
ஒசாமா பின்லேடனின் மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் அவனது வலதுகரமாக விளங்கிய காலித் பின் அட்டாஷ் என்பவனுடன் 2001ம் ஆண்டில் பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு வந்துள்ளனர்.
2002ம் ஆண்டில் கராச்சியில் அட்டாஷ் கைது செய்யப்பட்டான். இவனது கையாள் அபு அஹமத் அலி குவைத்தி என்பவனை அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. 2002ம் ஆண்டில் இருந்து உளவு பார்க்க தொடங்கியது.
அப்போது 2009-2010ம் ஆண்டுக்கு இடையில் அவன் ஒரு குறிப்பிட்ட செல்போனுக்கு தொடர்பு கொண்டு வந்ததும், எதிர்முனை எப்போதும் ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டிருப்பதும் உளவுத் துறையினருக்கு தெரிய வந்தது.
எதிர்முனையில் அவன் தொடர்பு கொள்ள முயற்சித்த நபர் யார்? என்பது தொடர்பாக குழப்பத்தில் இருந்து சி.ஐ.ஏ. அதிகாரிகள் அது ஒசாமா பின்லேடன் தான் என்பதை சாதுர்யமாக கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, நடத்தப்பட்ட தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான். எனவே, 2002ம் ஆண்டில் இருந்தே அவன் பாகிஸ்தானில் தங்கியுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்த நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.