Home இந்தியா நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராகிறார்: இம்மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராகிறார்: இம்மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1005
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூலை 9– குஜராத் சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று முதல்–மந்திரி பதவியை பிடித்த நரேந்திர மோடியின் செல்வாக்கை தேசிய அரசியலுக்கு பயன்படுத்த பாரதீய ஜனதா திட்டமிட்டது. இதையடுத்து அவரை 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்தது.

ஆனால் அவர் மீது நீதிமன்ற வழக்குகள் இருப்பதாலும், பல்வேறு வகையில் எதிர்ப்பு கிளம்பியதாலும் பாரதீய ஜனதா தனது திட்டத்தை அறிவிக்க தாமதப்படுத்தியது.

ஆனால் தனக்கு எதிரான தடைகளை அவர் தகர்த்து விட்டார். குஜராத் கலவர வழக்கில் இருந்து நரேந்திரமோடியை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இது தனக்கு கிடைத்த முதல் வெற்றியாக மோடி கொண்டாடினார்.

#TamilSchoolmychoice

அடுத்து கூட்டணி கட்சி தலைவரான நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு பாரதீய ஜனதா பணிய மறுத்து விட்டது.

M_Id_380073_Narendra_Modiஇதனால் நிதிஷ்குமார் கூட்டணியை விட்டே வெளியேறி விட்டார். அதன் பிறகு நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக வெளிப்படையாக அறிவிக்காமல் தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த முறை கட்சிக்குள்ளே எதிர்ப்பு வெடித்தது. பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தேசிய செயற்குழு கூட்டத்தை ஏற்க மறுத்தத்துடன் ராஜினாமா மிரட்டலும் விடுத்தார். பின்னர் அவர் சமரசம் ஆனார்.

அடுத்து குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் நரேந்திர மோடி பெயர் சேர்க்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் நரேந்திர மோடி பெயர் சேர்க்கப்படவில்லை. இதனால் நரேந்திர மோடி நிம்மதி அடைந்தார். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க இருந்த அனைத்து தடைகளும் விலகி விட்டது.

இதையடுத்து நரேந்திர மோடி பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார். இம்மாத இறுதியில் இதற்கான அறிவிப்பை பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற குழு வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் பாரதீய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். முக்கிய பங்கு வகித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்த பாரதீய ஜனதா முடிவு செய்தபோது மூத்த தலைவர்களின் எதிர்ப்பை ஆர்.எஸ்.எஸ். அடக்கியது. அத்வானி ராஜினாமா செய்தபோது அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சமரசம் செய்து ராஜினாமாவை வாபஸ் பெற வைத்தனர்.

மராட்டிய மாநிலம் அமராவதியில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் கூட்டம் நடந்தது. இதில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தன்னை சந்தித்த அத்வானியிடமும் நரேந்திர மோடிக்கு முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்தே அத்வானிக்கும், மோடிக்கும் சமரசம் ஏற்பட்டது. கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். எனவே இந்த மாத இறுதியில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதியாகி விட்டது.

மேலும் 2014 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை வாரணாசி தொகுதியில் நிறுத்தவும் பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. தற்போது வாரணாசி தொகுதி எம்.பி.யாக முரளி மனோகர் ஜோஷி இருக்கிறார். நரேந்திர மோடிக்காக அவர் தொகுதியை விட்டுக் கொடுக்கிறார். இது தொடர்பாக முரளி மனோகர் ஜோஷியுடன் ஆர்.எஸ்.எஸ். பேச்சு நடத்தியது.

இதன் மூலம் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றலாம் என்று தலைவர்கள் நம்புகிறார்கள். எனவேதான் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலத்தை குறி வைத்து இருக்கிறார். இதற்காக மோடியின் தீவிர ஆதரவாளரான அமித் ஷா உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்போ அல்லது அறிவிக்கப்பட்ட பின்போ அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நாடு முழுவதும் 100 பிரசார கூட்டங்களில் பங்கேற்கவும் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநில தலைவர்களுக்கும் தகவல் அனுப்பி ஆகஸ்ட் மாதம் இறுதியில் பிரசார கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

பாரதீய ஜனதாவுக்கு செல்வாக்கு உள்ள இடங்கள், வெற்றி பெறும் தொகுதிகளும் ஆராயப்பட்டு வருகிறது.