கெய்ரோ, ஜூலை 9- எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் அவரை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ராணுவ தலைமையகத்தில் அவர் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து மோர்சியின் ஆதரவாளர்கள், நேற்று ராணுவ தலைமையகம் முன் கூடினர். அப்போது, ராணுவதினருக்கும் மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 51 பேர் உயிரிழந்தனர். 435 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லீம் சகோதரத்துவ கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு இடைக்கால அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்தலை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளது. இடைக்கால அதிபர் அட்லி மன்சூர், எகிப்தில் 2014-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். தேர்தல் தேதி பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.