மாஸ்கோ, ஜூலை 10– அமெரிக்க உளவுத்துறையில் உளவாளி ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எட்வர்டு ஸ்நோடன் (வயது 28). சமீபத்தில் இவர் வெளிநாட்டு தூதரகங்களில் அமெரிக்கா உளவு பார்த்த ரகசியத்தை வெளியிட்டார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதை அறிந்த ஸ்நோடன் அங்கிருந்து தப்பி ஹாங்காங் சென்றார். பின்னர் ரஷியா தலைநகர் மாஸ்கோ சென்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கு கடந்த 2 வாரமாக தங்கியுள்ளார்.
இதையடுத்து அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷியாவிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அந்நாடு மறுத்து விட்டது. இதற்கிடையே தஞ்சம் அளிக்கும்படி உலக நாடுகளிடம் ஸ்நோடன் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு யாரும் தஞ்சம் அளிக்ககூடாது என அதிபர் ஒபாமா மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் அவருக்கு தஞ்சம் அளிக்க வெனிசுலா, நிகாராகுவா, பொலிவியா ஆகிய நாடுகள் முன் வந்தன. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும், நிகாரகுவா அதிபரும் மனிதாபிமான முறையில் தஞ்சம் அளிப்பதாக பகிரங்கமாக அறிவித்தனர்.
அதை தொடர்ந்து வெனிசுலாவில் அரசியல் தஞ்சம் அடைய எட்வர்ட் ஸ்நோடன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதை அதிபர் மதுரோவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த தகவலை ரஷியாவின் மூத்த எம்.பி. அலெக்சி புஸ்கோவ் தெரிவித்துள்ளார். இவர் ரஷிய பாராளுமன்ற சர்வதேச துறை குழுவின் தலைவராக உள்ளார். வெனிசுலாவில் தஞ்சம் அடைவதுதான் ஸ்நோடனுக்கு உகந்தது என கூறியுள்ளார்.