Home உலகம் வெனிசுலாவில் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம்!

வெனிசுலாவில் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம்!

1158
0
SHARE
Ad

வெனிசுலா: “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்என்றார் பாரதி. ஆனால், இன்றும் ஒரு வேளை உணவுக்கு வகையின்றி வறுமையில் வாடும் ஏழைகள் அதிகரித்து பிறந்த தாய்நாட்டை விட்டே வெளியேறும் அவலம் வெனிசுலா நாட்டில் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

அதிகப்படியான பணவீக்கம், மின்சாரக் குறைப்புகள், உணவு மற்றும் மருந்து பற்றாக்குறைகள் போன்றவை, வெனிசுலா நாட்டு மக்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது. பலர், இந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலா மடூரோ மற்றும் அவரது அரசாங்கம் மோசமான நிலையில் நாட்டை நிர்வகித்து வந்ததன் காரணத்தினால்தான் வெனிசுலா இந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்டது எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இருபது லட்சத்திற்கும் அதிகமான வெனிசுலா மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இன்றைய தினம் வெனிசுலாவை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை அதிகபடியான பணவீக்கமே.

விலைகள் சராசரியாக ஒவ்வொரு 26 நாட்களுக்கும் இரட்டிப்பாகும் நிலை உருவாகி உள்ளது. இவ்வாறான சூழ்நிலை, உணவு மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படைப் பொருட்களை வாங்குவதற்குக் கூட வெனிசுலா மக்கள் திண்டாடுகிறார்கள் என ஆய்வுகள் காட்டுகின்றன. சமீபத்தில் ஒரு கோப்பை காப்பியின் விலை, 2.5 மில்லியன் பெல்லிவார் (Bolívar) வரை சென்றுள்ளது.

பெரும்பான்மையானோர் அண்டை நாடான கொலொம்பியாவிற்கு குடிப் புகுந்து கொண்டிருக்கிறார்கள். அது போல் எக்குவடோர், பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளுக்குச் சென்று தஞ்சம் புகுந்துள்ளார்கள். மேலும் சிலர், பிரேசிலுக்கு சென்று விட்டனர். இந்நிலைத் தொடர்ந்தால் வெனிசுலாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.