கோலாலம்பூர், ஜூலை 11 – குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றம் செய்வதைத் தடுக்க, மதம் மாற்றுச் சட்டங்களைத் திருத்துமாறு, ஐந்து மாநில அரசாங்கங்களை ஜசெக கட்சியைச் சேர்ந்த தைப்பிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங் (படம்) கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ங்கா கோர் இது குறித்து கூறுகையில், “குழந்தைகளை மதம் மாற்றம் செய்வதற்கு பெற்றோர் இருவருடைய ஒப்புதலும் தேவை என்று மற்ற 6 மாநில மதமாற்றுச் சட்டங்கள் கூறுகிறது. ஆனால் நெகிரி செம்பிலான், பேராக், கெடா, மலாக்கா, சரவாக் ஆகிய 5 மாநில மதமாற்றுச் சட்டங்கள் மட்டும் அதற்கு முரண்பாடாக உள்ளது” என்று கூறினார்.
மேலும், கூட்டரசு அரசியலமைப்புக்கு உட்பட்டு அந்த மாநில அரசியலமைப்புகள் இருக்கும் வகையில், சட்டத்துறை தலைமை அலுவலகம் இது குறித்து அம்மாநில அரசாங்கங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.