புனே, ஜூலை 15- புனேயில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:-
பொருளாதார சரிவு, இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, பெருகி வரும் ஊழல் ஆகியவற்றை மதவாதம் என்ற திரைக்கு பின்னால் மறைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது.
கொள்கை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அரசு எல்லா நிலைகளிலும் தோல்வியையே சந்தித்து வருகிறது.
சீரான நிலக்கரி வினியோகம் நடைபெறாததால் நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன. முடிவுகளை எடுக்க முடியாத பிரதமர், கோப்புகளில் மீது ஏறி உட்கார்ந்துக் கொண்டிருப்பதால் நாடு இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
நமது பிரதமர் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவராக இருந்தும் நாட்டை அழிவுப்பாதையில் வழி நடத்துகிறார்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தை நாட்டிற்கு கொண்டு வரும் எந்த முயற்சியிலும் இந்த அரசு அக்கறை காட்டாததை வைத்து பார்க்கும்போது சில முக்கிய புள்ளிகளையும் அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தையும் காப்பாற்றவும் மத்திய அரசு முயல்கிறது என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.