Home அரசியல் சாமிவேலு, ம.இ.கா உட்கட்சித் தேர்தல்களில் தலையிடாவிட்டால் நாங்கள் ஏன் அவரைக் குறை கூறப் போகின்றோம்? –...

சாமிவேலு, ம.இ.கா உட்கட்சித் தேர்தல்களில் தலையிடாவிட்டால் நாங்கள் ஏன் அவரைக் குறை கூறப் போகின்றோம்? – சரவணனுக்கு டத்தோ ஹென்ரி பதிலடி

642
0
SHARE
Ad

ஜூலை 14 – அந்த தலைவர் சரியில்லை இந்த தலைவர் சரியில்லை என்று ம.இ.காவின் ஜனநாயக நடைமுறைகளில் தலையிட்டு, கட்சியில் போட்டியை ஏற்படுத்த சாமிவேலு முயற்சிக்காமல், நடுநிலையோடு ஒதுங்கியிருந்தால் நாங்கள் ஏன் சாமிவேலுவைக் குறைகூறிக் தாக்க வேண்டும்- அந்த அவசியமும் எங்களுக்கில்லை என பினாங்கு மாநில பொருளாளரும், பாகான் தொகுதி ம.இ.கா தலைவருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் (படம்) இன்று ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ சரவணனுக்கு பதிலடி கொடுத்தார்.

Saravanan-Slider“இப்போதே நாங்களும் கூறுகின்றோம். முன்னாள் தேசியத் தலைவர் என்ற முறையில், நடுநிலையாக இருந்து ம.இ.கா கிளைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவரோடு நான் ஒத்துழைத்து பணி செய்வேன் என்று சாமிவேலு கூறட்டும். இனி அவரைப் பற்றியோ, அவருடைய சர்வாதிகாரத்தைப் பற்றியோ யாரும் குறை கூற மாட்டார்கள். மாறாக, நடப்பு தலைவர் பழனிவேலு சரியில்லை என்று குறை கூற ஆரம்பித்தால், பின்னர் சாமிவேலுவின் தலைமைத்துவத்தில் நடந்த குறைகளை, சர்வாதிகாரத்தை நாங்களும் கண்டிப்பாக சுட்டிக் காட்டுவோம். அதனையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்றும் டத்தோ ஹென்ரி இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் உறுதியுடன் கூறினார்.

#TamilSchoolmychoice

எது சர்வாதிகாரம் இல்லை?

சாமிவேலு எப்போதும் சர்வாதிகாரமாக நடந்து கொண்டதில்லை என்றும் மத்திய செயலவையை கலந்தாலோசித்துத்தான் எதையும் செய்திருக்கின்றார் என்றும் இதுவரை யாரும் சொல்லாத புதிய உண்மையை சரவணன் (படம்) கண்டு பிடித்துக் கூறியிருக்கின்றார்.

1989ஆம் ஆண்டில் நாடு முழுக்க 300க்கும் மேற்பட்ட கிளைகளை எந்தவித காரணமும் இன்றி சாமிவேலு மூடினாரே, அது சர்வாதிகாரம் இல்லையா?

டான்ஸ்ரீ பண்டிதனை கட்சியிலிருந்து தன்னிச்சையாக நீக்கினாரே அது சர்வாதிகாரம் இல்லையா?

1990ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் துணைத் தலைவராக இருந்த சுப்ராவுக்கும் உதவித் தலைவராக இருந்த டத்தோ பத்மநாபனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்காமல் ஒதுக்கினாரே அது சர்வாதிகாரம் இல்லையா?

2004ஆம் ஆண்டில் கட்சியின் துணைத் தலைவராக இருந்தும் டான்ஸ்ரீ சுப்ராவுக்கு மீண்டும் நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கி வைத்தாரே அது சர்வாதிகாரம் இல்லையா?

கால ஓட்டத்தில் எத்தனையோ திறன் வாய்ந்த ம.இ.கா தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கியும், அவர்களது கிளைகளை மூடியும் ஒரு தலைப் பட்சமான முடிவுகளை எடுத்தாரே அது சர்வாதிகாரம் இல்லையா?

எங்களின் பாகான் தொகுதியையும், அதன் கிளைகளையும் 2006ஆம் ஆண்டு முதல் சுமார் நான்காண்டுகள் எந்தவித காரணமும் இன்றி மூடிவைத்தாரே, அது சர்வாதிகாரம் இல்லையா?

தனக்கு வேண்டியவர்களை, மத்திய செயற்குழு என்ற பெயரில் வைத்துக் கொண்டு அவர்களை அதட்டியும் உருட்டியும் எடுத்த சர்வாதிகாரத்தனமான முடிவுகளைத்தான் சாமிவேலு மத்திய செயலவையை கலந்தாலோசித்து செய்தார் என்று நீங்கள் கூறுகிறீர்களா, சரவணன் அவர்களே!

சாமிவேலுவுக்கு குடை பிடித்து கொடி நாட்டியவர் சரவணன்!

டத்தோ சரவணன் அடிமட்ட வாழ்க்கையிலிருந்து வந்தவராக இருக்கலாம். ஆனால் அடிமட்ட அரசியலில் இருந்து வந்தவரில்லை. ஆரம்ப காலம் முதல் தேசியத் தலைவராக இருந்த சாமிவேலுவுக்கு குடை பிடித்தே, தனது கொடியை நாட்டிக் கொண்டவர் சரவணன்.

இன்றைக்கு அவருக்கிருக்கும் வாய்ப்புக்களெல்லாம், பதவிகளெல்லாம் சாமிவேலுவின் தயவால் வந்தது, அதனால் தான் இப்போது மீண்டும் சாமிவேலுவுக்கு துதி பாடுகின்றார். சாமிவேலுவைத் தற்காத்துப் பேசுகின்றார்.

ஆனால், நான்காண்டுகள் எங்கள் தொகுதியும், எங்களின் கிளைகளும் அரசியல் காரணங்களுக்காக சாமிவேலுவால் சர்வாதிகாரத்தனமாக மூடப்பட்டிருந்தபோது, நாங்கள் சந்தித்த வலிகளும், வேதனைகளும் சொகுசாக அரசியலுக்கு சாமிவேலுவால் வந்த சரவணனுக்கு புரியாது.

சாமிவேலு ஏய்ம்ஸ்ட், எம்.ஐ.இ.டி.யை ம.இ.கா தேசியத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்!

கட்சிப் பணத்திலும், மக்கள் வழங்கிய நன்கொடைகளாலும், அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு வழங்கிய மான்யங்களாலும் கட்டப்பட்ட ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தை சாமிவேலுவை நம்பி இனியும் ஒப்படைக்க முடியாது. மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட கதிதான் நாளை ஏய்ம்ஸ்ட் நிறுவனத்திற்கும் ஏற்படும்.

எனவே, செப்டம்பரில் நடைபெறும் தேசியத் தலைவர் தேர்தலில் யார் அடுத்த தேசியத் தலைவராக வென்றாலும் அவரிடம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், எம்.ஐ.இ.டி அறநிறுவனத்தையும் ஒப்படைத்துவிட்டு சாமிவேலு ஒதுங்கிக் கொள்ளவேண்டும்.

இதுதான் உண்மையான நடுநிலையான ம.இகாவினரின் நிலைப்பாடாகும். இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்பும் இதுதான்.

அதை விடுத்து, நீங்களே மாய்ந்து, மாய்ந்து கொண்டு வந்த பழனிவேலு இன்றைக்கு திடீர் ஞானோதயம் வந்தவர் போல் சரியில்லை என குதர்க்க வாதம் பேசி கட்சியில் போட்டியை ஏற்படுத்த சாமிவேலு முயன்றால் அதற்காக அவருடைய கடந்த கால சர்வாதிகாரத்தனத்தை – அவருடைய கடந்த கால அரசியல் குப்பைகளை நாங்களும் வேறு வழியின்றி கிளறத்தான் செய்வோம்

-இவ்வாறு டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் தனது பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்.

,