சென்னை, ஜூலை 16– தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான டெசோ ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.
கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ‘டெசோ’ அமைப்பின் உறுப்பினர்களான கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கலி பூங்குன்றன், ரவிக்குமார், வழக்கறிஞர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:–
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1987-ம் ஆண்டு ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனையும் கையெழுத்திட்ட அந்த உடன்பாட்டின்படி, மாகாண கவுன்சிலர்களுடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள, வழி வகை செய்யும் வகையில் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13–வது திருத்தம் செய்யப்பட்டது.
இலங்கை அதிபர் மற்றும் அவருடைய அமைச் சரவையில் உள்ளவர்கள் 13–வது சட்டத்திருத்தம் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இந்திய அரசு அந்த ஒப்பந்தத் தில் கண்டுள்ளவாறு, எந்தவித திருத்தங்களும் இல்லாமல் ஒப்பந்தம் நிறை வேற்றப்படுவதற்குப் பொறுப் பேற்க வேண்டும்.
தமிழக மக்களும் மற்றும் உலகத் தமிழர்களும் ஒரு முகமாக முன் வைத்திடும் வேண்டுகோளை இந்தியா ஏற்று இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்ய வேண்டுமென இக்கூட்டம் இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் அத்துமீறல்கள் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் சிறிதும் குறையவில்லை. எனவே மத்திய அரசு இனியாவது உறுதியானதொரு நடவடிக் கையை, தமிழகத்தின் மீன வர்கள் பிரச்சினை ஒட்டு மொத்தமாக தீருகின்ற வகை யில் உடனடியாக எடுக்க வேண்டும்.
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13–வது திருத் தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள ‘காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதி களில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியும் நிறைவேற்றப்பட்டுள்ள நான்கு தீர்மானங்களையும், தமிழக மக்களின் கவனத் திற்குக் கொண்டு செல்லவும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும், டெசோ இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 8–ஆம்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில், தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.