Home அரசியல் ம.இ.கா அரசியல் விளையாட்டில் அதிரடி மாற்றங்கள்! சரவணனுக்குப் போட்டியாக களமிறங்கும் சோதி!

ம.இ.கா அரசியல் விளையாட்டில் அதிரடி மாற்றங்கள்! சரவணனுக்குப் போட்டியாக களமிறங்கும் சோதி!

522
0
SHARE
Ad

subra-and-palani

ஜூலை 18 – அரசியல் என்பதும் ஒரு சதுரங்க விளையாட்டு போல் தான். அங்கே யோசித்துக் கொண்டிருப்பவர்களை விட, அதிவேகமாக செயல்படுபவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். அப்படி ஒரு நிகழ்வு தான் நேற்று ம.இ.கா கட்சியில் நடந்துள்ளது.

கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில், நடப்பு தலைவர் பழனிவேலை தோற்கடிக்கும் ஒரு ஆயுதமாக முன்னாள் ம.இ.கா தேசிய உதவித் தலைவர் எஸ்.சோதிநாதனை களமிறக்க ஒரு குழு திட்டமிட்டது, ஆனால் அவர்களை விட அதிவேகமாக செயல்பட்டு அந்த ஆயுதத்தையே தன் வசப்படுத்திக் கொண்டுவிட்டார் பழனிவேல்.

#TamilSchoolmychoice

முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவின் புதல்வர் வேள்பாரியை மத்திய செயலவை உறுப்பினர் நியமன பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி. சுப்ரமணியத்தின் மகன் சுந்தர் சுப்ரமணியத்தையும், மற்றொரு நியமன உறுப்பினரான உஷா நந்தினிக்கு பதிலாக கட்சியின் முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதனையும் மத்திய செயலவை உறுப்பினர்களாக பழனிவேல் நியமித்திருக்கின்றார்.

பழனிவேலின் இந்த முடிவால் ம.இ.கா வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களும், ஆச்சர்யங்களும் எழுந்துள்ளன. கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் ம.இ.கா வின் தலைமைத்துவப் பதவிக்கு நிலவும் கடுமையான போட்டியை மிகத் தெளிவாக காட்டுகிறது.

சோதியின் செல்வாக்கு dato-sothinathan

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற 13 வது பொதுத்தேர்தலில், தெலுக் கெமாங்  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தன்னை தேர்ந்தெடுக்காத பழனிவேல் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்த சோதி, பழனிக்கு எதிராக கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார் என்று கூறப்பட்டது.

ஆனால் பழனிவேல் அதிவேகமாக சோதிநாதனை மத்திய செயற் குழு உறுப்பினராக நியமித்ததற்குக் காரணம் இருக்கிறது. தற்போது தனக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கட்சியின் உதவித் தலைவரான டத்தோ சரவணன், தான் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டதால், சரவணனுக்குப் போட்டியாக ஒரு சரியான தலைவரைத் தேர்வு செய்யும் நிலைக்கு பழனிவேல் தள்ளப்பட்டார்.

அந்த சூழ்நிலையில் பழனிவேலுக்கு, கட்சியில் இன்னும் செல்வாக்குடன் இருக்கும் சோதிநாதனை தேர்வு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அதுமட்டுமின்றி, சோதிநாதனைத் தேர்வு செய்வதன் மூலம், தனக்கு எதிராக அவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதையும் தடுக்கலாம்.

இதன் மூலம் சோதிநாதன் கட்சியில் தனக்கு உள்ள செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ம.இ.கா தேசிய துணைத் தலைவருக்கான தேர்தலில், பழனிக்கு எதிராக சோதிநாதன் களமிறங்கி தோல்வியைத் தழுவினார். அப்போட்டியில் சோதிநாதன் 280 வாக்குகளும், பழனி 629 வாக்குகளும் மற்றும் மற்றொரு வேட்பாளரான டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் 547 வாக்குகளும் பெற்றனர்.

அதன் படி பார்த்தால், துணைத் தலைவர் பதவியை அடைய தற்போது சோதிக்கு இன்னும் கூடுதலாக 500 வாக்குகள் மட்டுமே தேவை (மொத்தம் 1500 வாக்குகள்). எனவே சோதிக்கு பக்கபலமாக பழனிவேல் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது!

முதலில் நடைபெறவிருக்கும் தலைமைத்துவ தேர்தலில் சோதிநாதன், பழனிவேல் தான் சிறந்த தலைவர் என்று டாக்டர் சுப்பிரமணியம் மற்றும் சரவணனுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒருவேளை சுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றுவிட்டால், அடுத்த துணைத்தலைவர் சரவணன் தான் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே, சோதிக்கு சரவணனை எதிர்த்து போட்டியிடுவது பெரும் சவாலாக மாறிவிடும். காரணம் சரவணனுக்கு பக்கபலமாக சுப்ரா செயல்படுவார்.

அதன் பிறகு,சோதி தான் ஏற்கனவே பதவி வகித்த உதவித் தலைவர் பதவிக்கு தன்னை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

M Saravananபழனி வெற்றி பெற்றால், சரவணனுக்குப் பதிலாக சோதி!

இருப்பினும், தலைமைத்துவ தேர்தலில் சுப்ராவை எதிர்த்து பழனி வெற்றி பெற்றுவிட்டால், பிறகு சரவணனுக்கு எதிராக சோதி களமிறங்குவார். அவருக்கு ஆதரவாக பழனி செயல்படுவார்.

சுப்ரா ஒருவேளை தோல்வியடைந்தாலும், அவர் மீண்டும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளது. சுப்ராவின் ஆதரவாளர்கள் அவரை மீண்டும் போட்டியிடும் படி நெருக்குதல் கொடுப்பார்கள்.

எது எப்படியோ ம.இ.கா வில் இன்னும் இது போன்ற பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் எதிர்வரும் மாதங்களில் கட்டாயம் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்!